அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள படம் குட் பேட் அக்லி.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது.

இதுவரை 250 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதுடன் அஜித் படங்கள் இதுவரை ஏற்படுத்திய வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

அதேவேளையில் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜா இசையமைத்த வின்டேஜ் பாடல்களாலேயே இந்தப் படம் வெற்றிபெற்றதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்தப் படத்தில் தனது இசையில் உருவான மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட பட தயாரிப்பு நிறுவனத்திடம் முன்னனுமதி பெற்றிருந்ததாக விளக்கமளித்தது.

இந்த நிலையில் இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாலேயே படம் வெற்றிபெற்றதாக கீறல் விழுந்த ரெக்கார்டு போல பேசப்பட்டு வருவது குறித்து பிரேம்ஜி அமரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரேம்ஜி, “இளையராஜா தனது அண்ணன் என்ற முறையில் கங்கை அமரன் அவரை சப்போர்ட் செய்து பேசியுள்ளார். மற்றபடி படத்தின் வெற்றிக்கு ‘தல’ அஜித் தான் காரணம்” என்று கூறியுள்ளது அஜித் ரசிகர்களிடையே மேலும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.