டெல்லி: லாலு மீதான ரயில்வே வேலைக்கு நிலம் பெற்றது தொடர்பான மோசடி புகாரில்,  பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நிலையில், தனது மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறி  சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், பீகார் மாநில முதல்வருமான லாலுபிரசாத் யாதவ், தனது பதவிக்காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடை களுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து ரூ950 கோடி பணம் மோசடியாக பெறப்பட்டது என்பது உள்பட பல வழக்குகள் உள்ளன. இதில் 5 வழக்குகளில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உடல்நலம் பாதிப்பு காரணமாக, அவர் ஜாமினில் உள்ளார்.

இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, சிலருக்கு அரசு பணி வழங்கி, அதற்கு பதில்  அவர்களிடம் இருந்து முறைகேடாக நிலம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. குற்றப்பத்திரிகையின் படி, 2004 மற்றும் 2014 க்கு இடையில், பூரி மற்றும் ராஞ்சியில் அமைந்துள்ள இந்திய ரயில்வேயின் பிஎன்ஆர் ஹோட்டல்கள் முதலில் ஐஆர்சிடிசிக்கு மாற்றப்பட்டன, பின்னர் அதன் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் பராமரிப்புக்காக ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டது. பாட்னாவில் உள்ள சுஜாதா ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைநடத்தி வரும் நிலையில், நேற்று (மார்ச் 10ந்தேதி) டெல்லி, பீகார் உள்பட அவரரத வீடு உள்பட அவரது  உறவினருக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனை நடத்தப்பட்டது. இதில்,  ரொக்கப்பணம்  ரூ.53லட்சம், 1.5 கிலோ தங்க நகைகள், அரைக்கிலோ தங்கம்மற்றும் ஏராளமான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த  நில மோசடி வழக்கில் பீகார் துணை முதல்வரும், லாலுவின் மகனுமான  தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இந்த புகார் தொடர்பாக  சிபிஐ, கடந்த மாதம் 4ஆம் தேதி தேஜஸ்விக்குச் சம்மன் அனுப்பியது. அப்போது அவர் ஆஜராகவில்லை. இநத் நிலையில், நேற்று அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து, தேஜஸ்வி யாதவ்  கர்ப்பிணி மனைவி மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால், அவர்  விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.