சென்னை: தனியார் கருத்தரிப்பு நிறுவனங்களில் முறைகேடாக சிறுமியிடம் கருமுட்டை திருட்டு நடந்துள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளநிலையில்,  தமிழகத்தில் இனப்பெருக்க தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்துள்ளது.

தமிழ்நாட்டில் புற்றீசல்கள் போல தொடங்கப்பட்டு வருகிறது செயற்கை கருத்தரிப்பு மையங்கள். இதன்மூலம் பல்வேறு முறைகேடான செயல்கள் நடைபெறுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. முறைகேடான முறையில் கருமுட்டை, விந்தனுக்கள் திருடுதல், முறைகேடான முறையில் செலுத்தி பணத்தை வசூலித்தல் என ஏராளமான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இதுவரை வெளிச்சத்துக்குவராத நிலையில்,  ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த முறைகேடான விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கிளைகளைக்கொண்ட பிரபல நிறுவனம் பெயர் சிக்கி உள்ளது. இந்த வவிகாரத்தில், அந்த சிறுமிக்கு தெரியாமலேயே, மருத்துவர்கள் உதவியுடன் கருமுட்டை திருடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகாரில் சிறுமியின்  உறவினர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கருமுட்டையை விற்பதற்கு தூண்டிய சிறுமி யின் தாய் சுமையா, சுமையாவின் 2வது கணவர் சையத் அலி, இடைத்தரகராக செயல்பட்ட மாலதி மற்றும் சிறுமியின் வயதை கூடுதலாக ஆவணங்களில் மாற்றிய ஜான் உட்பட 4 பேரை ஈரோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, தமிழ்நாட்டில்,  இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு  5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இந்த குழுவானது சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. குழு உறுப்பினர்களாக, பெண்கள் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  குழுவின் உப தலைவராக குடும்ப நலத்துறை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன்,   இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்ட விதிமீறல்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை அபராகம் மற்றும் 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போது அமலுக்கு வந்துள்ள சட்டத்தின்படி 23 முதல் 35 வயது பெண்களிடம் மட்டுமே கருமுட்டை எடுக்க முடியும். சட்டத்தை அமல்படுத்த மாநிலத்தில் விதிகளை அறிவிக்காத நிலையில் கருமுட்டை விவகாரத்தை அடுத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.