போபால்
தாம் தினமும் கோமியம் குடிப்பதால் தனக்கு கொரோனா மருந்து தேவை இல்லை பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா தாகுர் கூறி உள்ளார்.
பாஜக மக்களவை உறுப்பினரான பிரக்யா தாகுர் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருகிறார். ஏற்கனவே மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை தேச தியாகி எனக் கூறியது சர்ச்சையை உண்டாக்கி அதன் பிறகு அவர் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அவர் தான் கோமியம் குடித்து வந்ததால் மார்பக புற்று நோய் குணமானதாகக் கூறி அடுத்த சர்ச்சையைக் கிளப்பினார்.
இந்நிலையில் போபாலில் நடந்த பாஜக கூட்டத்தில் பிரக்யா தாகுர், “எனக்குக் கடுமையான வலி இருந்த போது கோமியத்தைக் குடிக்கத் தொடங்கினேன். ஆகவே தற்போது கொரோனாவுக்காக எந்த மருந்தும் எனக்கு தேவை இல்லை. கோமியம் மூலம் நுரையீரலைக் காக்கலாம். நான் தினமும் கோமியம் குடிக்கிறேன் எனக்கு கோமியம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், “கோமியம் கொரோனா நோய் தொற்றையோ அல்லது வேறு எந்த நோய்களில் இருந்தோ மனிதர்களைக் காக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை” என பிரக்யா தாகுருக்கு பதில் அளித்துள்ளனர்
கடந்த ஆண்டு பிரக்யா தாகுர் கொரோனா நோய்த் தொற்று அறிகுறி காரணமாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.