ஐதராபாத்: “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற திட்டம் நிறைவேற்றப்படக்கூடியதுதான் என்றும்; ஆனால், சட்ட சபைகளுக்கான ஆயுள் கால அளவை வழங்கும் சட்டப்பிரிவுகளில் திருத்தம் மேற்கொண்டாலொழிய அத்திட்டம் நடைமுறை சாத்தியமாகாது என்றும் கூறியுள்ளார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மக்களைவை அல்லது மாநிலங்களவை ஆகியவற்றில் குறைந்தபட்சம் 1 உறுப்பினரைக் கொண்ட நாடெங்கிலுமுள்ள கட்சிகளை அழைத்து, “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற திட்டம் குறித்து கருத்துக் கேட்க முடிவுசெய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அதேசமயம், இத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, “அனைத்துவித நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் அதிகளவிலான துணை ராணுவம் மற்றும் காவல் படைகளை பணியில் அமர்த்துதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் இது சாத்தியமான ஒன்றே.

ஆனால், மாநில சட்டசபைகளின் ஆயுள் கால அளவுகள் குறித்து நாம் ஒரு முடிவு எடுக்க வேண்டியுள்ளது. சில அவைகளுக்கு 2.5 ஆண்டுகள் ஆயுள் இருக்கலாம் மற்றும் சில அவைகளுக்கு 4.5 ஆண்டுகள் ஆயுள் இருக்கலாம். எனவே, இதுதொடர்பாக சில சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதேசமயம், இந்தப் புதிய முயற்சியால் பல நன்மைகள் கிடைத்தாலும், பல நடைமுறை சிக்கல்களும் இருப்பதால், இத்திட்டத்திற்கு எத்தனை கட்சிகள் ஒப்புக்கொள்ளும் என்பதும் யாருக்கும் தெளிவுடாத விஷயம்” என்றார்.