விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மேலும், புலிகளின் பெயரைச் சொல்லி வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களிடம் சீமான் நிதி வசூல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
வைகோ, பிரபாகரனுடன் பல நாட்கள் ஈழத்தில் இருந்தவர். அதே போல பிரபாகரனுடன் இருந்த, கோவை. ராமகிருஷ்ணனும், அந்த படம் போலியாக இருக்க வாய்ப்புள்ளது என்றார்.
இது குறித்து சீமான் தரப்பில் விளக்கம் ஏதும் சொல்லாத நிலையில் இந்த விவகாரம் பூதாகரமெடுத்துள்ளது.
இந்த நிலையில் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தம் வரை அங்கிருந்த ஈழத்து ஊடகவியலாளரான சிவகரன், “பிரபாகரனுடன் சீமான் படம் எடுத்துக்கொண்டது உண்மைதான்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “சீமான் தாயகம் (ஈழம்) வந்தபோது, கிளிநொச்சியில் அவரை சந்தித்து பல மணி நேரம் பேசியிருக்கிறேன். அவர் வன்னிக்கு வந்து பிரபாகரனையும் சந்தித்தார். மேலும் பல தளபதிகளையும் சந்தித்தார். அனைத்தும் உண்மை. இந்த உண்மை அறிந்த பல ஆயிரம் பேர், இன்று உலகம் முழுதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு ஈழத்து ஊடகவியலாளரான ஜீவேந்திரன் நடராஜன், “பொதுவாக பிரபலங்கள் முக்கியஸ்தர்கள் வரும்போது பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்தான்.
ஆனால் இந்த படம் போலியா உண்மையா என்பதை விஞ்ஞான ரீதியாகத்தான் உறுதிப்படுத்தலாம். அப்படி தொழில் நுட்பரீதியாக உறுதிப்படுத்துவது மிக எளிதான விடயம். அதைச் செய்து உண்மையை நிலைநாட்டலாம்.
மற்றபடி சீமானை பிடித்தவர்கள் உண்மை என்றும் பிடிக்காதவர்கள் போலி என்றும் கூறுவார்கள். அந்த கருத்துக்களை ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.