சென்னை: தமிழ்நாட்டில் மின் தேவை 20,000 மெகாவாட்-ஐ கடந்து இதுவரை இல்லாத அளவுக்கு  புதிய உச்சம் அடைந்துள்ளது என மின்வாரியம் தெரிவித்து உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மின்வெட்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு மின்தேவை அதிகரிக்கும் என ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் கூறியிருந்த மின்சார வாரியம், வழக்கமாக உபயோகப்படும் 18ஆயிரம் மெகாவாட் என்பது 20ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உயரும் என கூறியிருந்தது. ஆனால்,  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால்  தற்போதே,  தினசரி மின்நுகா்வு 20000 மெகாவாட்டை தாண்டியுள்ளதாக  மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் தினசரி மின் தேவை 17000 முதல்  18000 மெகாவாட்டாக இருந்து வந்தது. அதேவேளையில், தமிழகத்தின்மொத்த மின்உற்பத்தி நிறுவுத்திறன் சுமாா் 33000 ஆக இருந்து வரும் நிலையில்,  , தமிழ்நாடு மின்வாரியம் மூலம் 7158 மெகாவாட் மின்சாரமும், தனியாா் பங்களிப்புடன் கூடிய மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் 1105.5 மெகாவாட் மின்சாரமும், கேப்ட்டிவ் மின் நிலையங்கள் மூலம் 223 மெகாவாட் மின்சாரமும், மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 6949 மெகாவாட் மின்சாரமும், இதுபோக காற்றாலை மற்றும் சூரியமின் சக்தி மூலம் என தினசரி உற்பத்தி மற்றும் வாங்கப்படும் மொத்தம் 18479.59 மெகாவாட் மின்சாரம் மூலம் தேவையை பூா்த்தி செய்து வருகிறது.

இந்த ஆண்டு, , கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் மின்தேவையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, 2024 ஜன.26-இல் தமிழக தினசரி மின்நுகா்வு 14,332 மெகாவாட்டாக இருந்தது. தொடா்ந்து  படிப்படியாக தினசரி மின்நுகா்வு அதிகரித்தது. பிப்.5-ஆம் தேதி உச்சபட்ச நேர மின்நுகா்வு தினசரி 15990 மெகாவாட்டாக அதிகரித்தது.  இதே நிலை நீடித்தால் மின்தேவை மேலும் அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், பிப்ரவரி மாத நிலவரப்படி,  ரும் கோடை காலத்தில் தினசரி மின்நுகா்வு 20,744 மெகாவாட்டை எட்டும் என எதிா்பாா்க்கப்படுதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ஆனால், எதிர்பார்த்ததைவிட மின் நுகர்வு வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மின் தேவை 20,000 மெகாவாட் என்ற அளவை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மின் தேவை 19,580 மெகாவாட் என பதிவாகியிருந்தது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மீண்டும்  மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.

இதுகுறித்து கூறிய மின்வாரிய அதிகாரிகள், அதிகரித்து வரும் கோடை வெப்பம் மட்டுமின்றி,  வணிக நிறுவனங்களின் பெருக்கம், மே மாதத்தில் நடைபெறவுள்ள தோ்தல் உள்ளிட்டவற்றால் மேலும் மின்நுகா்வு அளவு உயர வாய்ப்புள்ளது என்று அச்சம் தெரிவித்து உள்ளார். ஆனால், மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறும் அதிகாரிகள்,  மின்நுகர்வு அதிகரித்துள்ளதால்,  தமிழ்நாடு அரசு,  அதற்கேற்ப மின்சாரத்தை கொள்முதல் செய்யவேண்டி நிலையில் உள்ளதாகவும்,   ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடனான ஆற்றல் பரிமாற்றம் அடிப்படையில் தேவைக்கு ஏற்ப மின்சாரம் பரிமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும்,  இதுதவிர தனியாா் மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து தேவையான அளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவுமை தெரிவித்து உள்ளனர். 

அதுபோல, கேரள மாநிலத்தில்  மின்சார நுகர்வு சாதனை உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக 100 மில்லியன் யூனிட்களை தாண்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.