தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது.

8 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று சட்டப்பேரவையில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் ஆளுநர் ஆர். என். ரவி, கடந்த முறையை போன்ற இம்முறையும் தமிழக அரசின் உரையை முழுவதும் வாசிக்காமல் ஒருசில பத்திகளை மட்டுமே வாசித்தார்.

அதோடு அவை நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில், தமிழக அரசின் உரையில் ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்த உரையின் பகுதி வெளியாகி உள்ளது.

அதில், “ஒட்டுமொத்த தேசத்திற்கும் சமூக நீதி, மத நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் ஜனநாயக இலட்சியங்களின் ஜோதியாக தமிழ்நாடு நிலைத்து நிற்கும்” என்ற பகுதியையும்

மேலும், “சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கோட்பாட்டை வழங்கிய தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழ் சகோதரர்களுக்கு எதிரான குடியுரிமையைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மாநில அரசு உறுதியளிக்கிறது” என்பதையும் வாசிக்காமல் தவிர்த்தார்.

தவிர, “ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுத்தப்பட்ட பின் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி அதிகரித்துள்ள நிலையிலும் மெட்ரோ ரயில் போன்ற மாநிலத்திற்கான மேம்பாட்டு திட்டங்களையும் அதற்கான மாநில அரசின் 50 சதவீத பங்கை வழங்க தயாராக உள்ள நிலையில் மத்திய அரசு அதற்குரிய பங்கை ஒதுக்கீடு செய்யாமல் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை முடக்கியுள்ளது” ஆகிய வாசகங்களையும் வாசிக்காமல் தவிர்த்துள்ளார்.