வாடிகன்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் நடவடிக்கை எடுப்பதில் பெரிய தவறு புரிந்துவிட்டதாக போப் ஆண்டவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

உலக கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவர் போப் ஆண்டவர்.  தற்போதைய போப் ஆண்டவராக ஃப்ரான்சிஸ் உள்ளார்.    கத்தோலிக்க பாதிரியார்கள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை அளிக்கும் பொறுப்பு போப் ஆண்டவருக்கு உண்டு.   அதனால் அனைத்து புகார்களும் போப் ஆண்டவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

கடந்த 2011 ஆம் வருடம் சிலி நாட்டைச் சேர்ந்த தலைமை பாதிரியார் (பிஷப்) ஜுவான் பாரோஸ் பல குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமைகள் புரிந்ததாக புகார் எழுந்தது.   அதை ஒட்டி அவரை திருச்சபையில் இருந்து போப் ஆண்டவர் நீக்கினார்.  மேலும் ஜுவானுக்கு ஆயுட்கால தடையும் விதித்தார்.   ஆனால் 2015ஆம் ஆண்டு போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி மீண்டும் அவரை திருச்சபையில் போப் இணைத்துக் கொண்டார்.

அத்துடன் ஜுவானுக்கு தலைமை பிஷப் பதவியும் போப் அளித்தார்.   அவர் மீது குற்றம் சாட்டியவர்களை இடது சாரியினர் என போப் குற்றம் சாட்டினார்.  அவர் இந்த வருடம் ஜனவரி மாதம் சிலி நாட்டுக்கு சென்ற போது பல கத்தோலிக்க தேவாலயங்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ஹன.   ஆனால் போப் ஜுவானை கட்டி அணைத்து ஆசிர்வதித்தார்.    மேலும் ஜுவான் குற்றமற்றவர் என்பதை தாம் முழுவதுமாக நம்புவதாக தெரிவித்தார்.

போப் சிலே வில் இருந்து திரும்பிய பின் அவருக்கு அந்நாட்டின் தேவாலயங்களில் இருந்து மேலும் புகார்கள் குவியத் தொடங்கின.    அதனால் ஜுவான் மீது சந்தேகம் அடைந்த போப் அவர் மீது மறு விசரணைக்கு உத்தரவிட்டார்.    அந்த விசாரணையில் 64 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.   சுமார் 2300 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை போப் ஆண்டவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அதில் ஜுவானின் குற்றங்கள் விவரிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்த போப் ஆண்டவர். “உண்மையை இப்போதுதான் அறிந்துக் கொண்டேன்.  நான் எனது தவறான நடவடிக்கைகளுக்கு  நான் வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.    பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் சந்தித்து எனது மன்னிப்பை கோர விரும்புகிறேன்.   எனது நடவடிக்கை தவறானது என ஒப்புக் கொள்கிறேன்.”  என தெரிவித்துள்ளார்.