சென்னை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் தொடரும் என அக்கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இங்கும் தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் தொடர்வதாகப் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி 1 தொகுதியைப் பெற்றுப் போட்டியிடும் எனவும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அ.தி.மு.க.விடம் கேட்டுள்ளதாகவும் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.