சென்னை: தமிழகம் முழுவதும் மோசமான நிலையில் இடிந்து விழா காத்திருக்கும் 60 அரசு குடியிருப்புகள் விரைவில் இடித்து அகற்றப்படும் என தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
சென்னை திருவொற்றியூரில் 23ஆண்டுகள் பழமையான குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பழுதடைந்து காணப்படும் அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 253-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர் முத்துசாமி, சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு 1 கோடியே 83 லட்சம் ஒதுக்கீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படுவதற்கு, இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், மாநிலம் முழுவதும் வீட்டு வசதி வாரியத்தினால் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்று வருகறது. இதுவரை ஆய்வு செய்த 193 அரசு குடியிருப்புகளில் 60 இடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அவைகள் விரைவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதியதாக வீடுகள் கட்டப்படும் என்றார். அரசு தரமான குடியிருப்புகளை கட்டிக்கொடுத்தாலும், குடியிருப்புவர்கள் அதை நன்றாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.