சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை நகர மக்களின், குடிநீர் தேவைக்காக, முதன் முதலில் கட்டப்பட்டது, பூண்டி நீர்தேக்கம். இந்த அணையானது, கடந்த, 1939ல் சென்னையில் ஏற்பட்ட கடும் குடிநீர் பஞ்சமை நிலவியது. மக்கள் தண்ணீருக்கு தவியாய் தவித்தனர். அப்போதைய, சென்னை மேயர் சத்தியமூர்த்தி, சென்னையில் இருந்து, 60 கி.மீ., தூரத்தில், கொற்றலை ஆற்றின் நடுவில், பூண்டி எனும் இடத்தில், நீர்தேக்கம் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்தார். அதைத்தொடர்ந்து, 1944ல், அணை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
அணையின் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி; பரப்பளவு, 121 ச.கி.மீட்டர். இந்த அணைக்கு காற்றாற்று நீர் மட்டுமின்றி, கிருஷ்ணா நீரும் கொண்டு வரப்படுகிறது. இந்த அணை நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் என, இரண்டு கால்வாய்கள் மூலம், சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற, 16 மதகுகள் உள்ளன.
தற்போது அணையின் மொத்த உயரமான 35 அடியில், நீர்மட்டம் 33.90 அடிக்கு தண்ணீர் நிரப்பி முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து, கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.