சென்னை: தி.நகரில் உள்ள பிரபல ஜவுளி கடையான போத்தி துணிக்கடையின் குடோனில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து,பெரும் சேதத்தை தவிர்த்தனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்த நாசமானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் பிரபல போத்தீஸ் ஜவுளிகடைக்கு சொந்தமான குடோன் உள்ளது. இதில் இரண்டாம் தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தியாகராய நகர், அசோக் நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு நிலையங்களில் வீரர்கள் வாகனங்களில் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீவிபத்து குறித்து மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தீ விபத்தால் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலானது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், கடை திறக்கப்படாமல் இருந்ததும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.