சென்னை: சென்னையில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால், குழந்தைகள் பள்ளிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று  சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இன்று மழைப் பெய்ய  வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.


சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனத்த மழை  கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என  தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்பட  12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்துள்ளது.