சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் 3ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பால், பதவி இழந்த அமைச்சர் பொன்முடியின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொன்முடி தரப்பின் கோரிக்கையை ஏற்று, தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் உச்ச நீதிமன்றத்தினை நாடி பொன்முடி மேல் முறையீடு செய்து கொள்ள வேண்டும். ஜாமீனும் பெற வேண்டும். இல்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஊழல் வழக்கில் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவரது பதவி தானாகவே பறிபோய்விடும். இந்த நிலையில், பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோனது. இதனால், அவர் அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவரானார். இதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்து வந்த இலாகாவை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்க ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். முன்னதாக சிறையின் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்புத் துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோரிடம் கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டுக்காக இந்தியாவிலேயே ஆட்சியை இழந்த ஒரே கட்சியான திமுகவில், தற்போது, திமுகவைச் சேர்ந்த ஓர் அமைச்சர் ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அமைச்சர் பதவியை இழந்துள்ளம் திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.