சென்னை: அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500உடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு இன்றுமுதல் விநியோகிகப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுதிப்பு கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத் தொகுப்பில், திராட்சை, முந்திரி, ஏலக்காய், பச்சரிசி, சர்க்கரை முழு கரும்பு உடன் இநத ஆண்டு ரூ.2500 பணமும் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில்கொண்டு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இந்த பரிசுத்தொகுப்புக்கான பொருட்கள் அனைத்தும், ஏற்கனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில், ரேஷன் கடை ஊழியர்கள் அதனை ‘பேக்கிங்’ செய்து துணிப்பையில் போட்டு தயாராக வைத்துள்ளனர்.
இந்த பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதையடுத்து, இன்று முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், இங்கே வசிக்கும் 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் பயன்அடைவார்கள் என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.
கூட்டத்தை தடுக்கும் வகையில், காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் என 2 ஷிப்டுகளாக பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளது.