சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கல் என முழக்கமிட்டு பொங்கலோ மரியாதை செலுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் திருவிழா, உழவுத் தொழிலுக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் பெருமை சேர்க்கும் திருவிழா என குறிப்பிட்டுள்ளார். பொங்கலிட அனைவரும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம் என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். போற்றுதலுக்குரிய உழவர் பெருமக்கள், தங்கள் வாழ்வில் ஏற்றம்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், அதனைத் தொடர்ந்து அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது ஆட்சியிலும், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டன என்பதை, இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன். அறுவடைத் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; இப்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும்; வியர்வை சிந்தி உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்; இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதற்கேற்ப, இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும், இதயங்கள் தோறும் இன்பங்கள் தங்கட்டும் என நெஞ்சார வாழ்த்தி, தமிழக மக்கள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக வாழ எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி: தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா, தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாள். இது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட விவசாய திருநாள். சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாகத் தைப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். இந்தியாவில் கடந்த எட்டரை ஆண்டு காலமாக மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு விரோதமாகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழ் மக்களை கொதிப்படையச் செய்து வருகிறது. சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது ஆர்.என். ரவி நடந்து கொண்ட விதம் தமிழ் மக்களிடையே மிகுந்த வெறுப்பை வளர்த்திருக்கிறது.
தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் சில பகுதிகளை தவிர்த்தது தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும். இத்தகைய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வரம்பு மீறிய செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த இலக்கை அடைய அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வது மிகமிக அவசியமாகும். எனவே, தமிழர்களின் உரிமைகள், பண்பாடு, தனித்துவத்தை பாதுகாப்பதற்கு உரிய சூழல் வருகிற பொங்கல் புத்தாண்டில் நிச்சயம் தொடங்கும் என்று நம்புகிறோம். தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனங்கனிந்த பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விமரிசையாக கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. தமிழர்களுக்கு இப்பொங்கல் பண்டிகையானது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள், இழப்புகள் இனி வரும் காலத்தில் ஏற்படாமல் இருக்க, புத்தொளி பிறக்க, தமிழர்களின் வாழ்வும், தமிழ்நாடும் முன்னேற நல்வழி காட்டட்டும். தமிழர்களாகிய நம் பண்பாட்டை, மாண்பை, பழமையை நிலைநாட்டும் தனிப்பெரும் திருவிழாவான தைப்பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ் மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாமக நிறுவனர் டாக்டர் ‘ராமதாஸ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் முதன்மைத் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.
உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இனமும் தமிழினம் தான். இந்த இரு உன்னத செயல்களுக்கும் தமிழர்கள் பயன்படுத்திய கருவி தான் பொங்கல் திருநாள் ஆகும். உழைப்பாளிகளுக்கும் கொண்டாட்டங்கள் தேவை என்பதை உலகிற்கு உணர்த்தும் திருநாள் தைப்பொங்கல் ஆகும். அந்த வகையில் அது சிறப்பானது.தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. கல்வி, தொழில், வணிகம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்திலும் தடைகளை தகர்த்து புதிய வழிகளை தைத் திருநாள் உருவாக்கித் தர வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அந்த அறிகுறிகள் முழு வெற்றிகளாக வேண்டும். தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலுமுள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தைப்பொங்கல் திருநாளில் இயற்கையை காக்க தமிழர்களாக உறுதியேற்போம்!!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழவுக்கு வணக்கம் செலுத்தும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா தான். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும். பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுபவை ஆகும். ஆனால், பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும் கொண்டாடப்படுகிறது.
உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். பொங்கல் திருநாளில் இயற்கையை வனங்கும் நாம், அதை போற்றவும், காக்கவும் வேண்டும். பொங்கல் திருநாள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் இயற்கையை காக்க வேண்டியன் அவசியத்தை வலியுறுத்துவதும் ஒன்றாக இருக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்காததன் விளைவைத் தான் ஒட்டுமொத்த உலகமும் காலநிலை மாற்றம் என்ற பெயரில் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கரிமவாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், பூகோள வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்காமல், கொடுமையானதாக மாறிவிடும் ஆபத்து அதிகரித்து வருகிறது.
தைப்பொங்கல் எப்போதும் நன்மைகளை மட்டுமே வழங்கும். அந்த வகையில் தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும். அத்துடன் நம்மை வாழவைக்கும் இயற்கைக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், தமிழர்கள் அனைவரும் இயற்கையை காக்க தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உழவையும், உழைப்பையும் கொண்டாடும் பொங்கல் திருநாள், தமிழ் பேசும் மக்களின் தனிச் சிறப்பான பண்பாட்டு வெளிப்பாடாக உள்ளது. மதங்கள், சாதிகள் என அனைத்து வேற்றுமைகளையும் கடந்து, இயற்கையைப் போற்றி, உழைப்பின் உன்னதத்தை உயர்த்திக் காட்டும் இந்த நாளின் சிறப்பை மென்மேலும் வளர்த்தெடுப்போம், மக்கள் ஒற்றுமைத் திருவிழாவாக, தமிழ் வெளியெங்கும் கொண்டாடி மகிழ்ந்திருப்போம். தமிழ்நாடு என்ற பெயரைக் கூட ஏற்க மறுக்கும் சக்திகள் ஒன்றிய ஆட்சியில் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒற்றை மதம் என்ற பெயரில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஒற்றை கலாச்சாரத்தை வற்புறுத்தி பன்முக பண்பாட்டை அழிக்க நினைக்கிறார்கள். ஒற்றை மொழி என்ற பெயரில் ஆதிக்க போக்கை முன்னெடுக்கிறார்கள். சனாதன மேலாதிக்கத்தையும் தொடர்ந்து புனைவுகளின் பேரால் திணிக்கிறார்கள். இவற்றையெல்லாம் செய்துகொண்டே இந்தியாவின் உழவர்களையும், உழைப்பாளர்களையும் நசுக்கும் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளை வேகப்படுத்துகிறார்கள்.
அதற்கெல்லாம் எதிராக சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, வளமான வரலாற்று அடித்தளத்தைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் முற்போக்கு பண்பாட்டு அடையாளமாகவும், உழவையும் உழைப்பையும் கொண்டாடி இயற்கையைப் போற்றும் விழாவாகவும் பொங்கல் அமைந்துள்ளது. மிச்சமுள்ள பிற்போக்கு சிந்தனைகளையும், ஆணாதிக்கத்தையும், சாதி அழுக்குகளையும் போகியில் பொசுக்கி, நல்லதொரு முன்னேற்றமான எதிர்காலத்தை எதிர்நோக்கி நம்பிக்கையோடு முன்செல்வோம் என்று சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு சார்பில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தொன்மை மரபு சார்ந்த பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களின் நிகழும் நிகழ்ச்சிப் போக்குகள் பெருங்கவலை அளிக்கின்றன. மனிதனை, மனிதனே பகைத்தும், இழித்தும், பழித்தும் பேசும் வெறுப்பு அரசியல் அதிகார மண்டபத்தில் அமர்ந்து கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட மரபுகளை மறைத்து, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தலைமை என தனிநபர் மையப்பட்ட, சிறு கும்பல் சர்வாதிகாரம் ஆட்சி நடைமுறையாகி வருகிறது.
மனித சமூகத்தை பிளவுபடுத்திய நால்வர்ண முறையும், இதனை ஆதாரப்படுத்தி கட்டமைக்கப்பட்ட சாதிய அடுக்குமுறையும் நியாயப் படுத்தப்படுகின்றது. மனிதன் குடிக்கும் குடிநீரில் மலத்தை கலக்கும் ஈனச் செயல்கள் நடைபெறுகின்றன. சவால்களை சந்தித்து வென்று வாழும் தமிழர் வாழ்வில் சனாதானத்துக்கு இடமில்லை என்று வெற்றி முழக்கமிடும் பொங்கலாக, தமிழ்நாடு முழுவதும் கட்சி அலுவலகங்களிலும், இல்லங்களிலும் பொங்கலிட்டு தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என குலவையிடுவோம். ஜனநாயக, மதச்சார்பற்ற, சமூக நீதி, தேசபக்தி உணர்வு கொண்ட அனைவரும் ஒருங்கிணைந்து “பொங்கல் திருநாளில்“ குறுகிய மதவெறி, சாதிவெறியை முறியடிக்க தைத் திருநாளில் உறுதி ஏற்போம்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: உழைப்பையும் உலகின் அச்சாணியான உழவர்களையும் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடும் அன்புத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் அகங்கனிந்த நல்வாழ்த்துகள்..! பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்கள் எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்றிடப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: அனைவருக்கும் அனைத்தும்‘ என்ற சமூகநீதிக் கோட்பாட்டினை தனது அடையாளமாக்கிய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பொங்கல் – தை புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துப் பொங்கட்டும், இன்பம் தொடரட்டும்! இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் – அனைவருக்கும்! என்றும் இன்பம் சூழ்ந்திடுக!
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: தை முதல் நாள்- புத்தாண்டு திருநாளில் தமிழ்ப்பெருங்குடி மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் திருநாள் மட்டுமே தமிழினம் கொண்டாடுகிற மதசார்பற்ற பெருநாளாகும். எந்தவொரு மத அடையாளமோ, மதம் சார்ந்த சடங்குகளோ இல்லாமல் உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் இத்திருவிழா நாளில், மதசார்பின்மையைக் கடைபிடிக்கவும், அதனைக் காப்பாற்றவும் உறுதியேற்போம்.
தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைப்பதற்கு நயவஞ்சக சக்திகள் நட்புமுகம் காட்டி, இது நாடா? அகமா? என்றெல்லாம் நாடகமாடுவோரின் அரசியல் நுட்பத்தை உணர்ந்து, அவர்களின் சதிமுயற்சிகளை முறியடிக்கவும் உறுதியேற்போம். புரட்சியாளர் அம்பேத்கர் , தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்களையும்; சமூகநீதி, சமத்துவம் போன்ற சொற்களையும் உச்சரிக்கவே முடியாதென துணிந்து செயல்படுபவர்களின் தீங்கான போக்கை- உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள தவறினால், சனாதன சக்திகளின் சதி அரசியலுக்குப் பலியாகும் கேடானநிலைக்குத் தள்ளப்படுவோம்.
இத்தகைய ஒரு அவலநிலை உருவாகாமல் தடுத்து தமிழ்ச்சமூகத்தைப் பாதுகாத்திட தமிழர் திருநாளில் உறுதியேற்போமென சனநாயக சக்திகள் யாவருக்கும் வேண்டுகோள் விடுத்து, எனது மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.