புதுச்சேரி: இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் குலைத்திருக்கிறார் என்று அம்மாநில அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் விருந்தினர் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறி உள்ளார். தொடர்ந்து அவர் பேசியதாவது: சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தக்கூடாது என்று திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில், விழாவை என்னென்ன அடிப்படைகளில் நடத்தலாம் என்பது பற்றி வாதி, பிரதிவாதிகள் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நடத்திய கூட்டத்தில், விழா நடத்தலாம், ஆனால் நடத்தக்கூடாது என்ற ஒரு நிலைக்கு, வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கி, சனிப்பெயர்ச்சி விழாவையே அதிகாரிகள் கேள்விக்குறியாக்கியுள்ளனர். பக்தர்கள், கோயில் ஊழியர்கள் என அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். இதற்கு ஆளுநரின் தலையீடு தான் காரணம்.

புதுச்சேரியில், இயற்கை வளமோ, வருவாயோ இல்லாத மாநிலம். கொரோனா எதிரொலியாக பல மாதங்களாக வருவாய் இல்லாமல் அரசும், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும் நிதி தர வில்லை. இந்துக்களுக்கான அரசு என்று சொல்லக் கூடிய, மத்திய பாஜக அரசு நியமித்த துணைநிலை ஆளுநர், இந்துக்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ள சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை குலைத்திருக்கிறார்.

சனிப்பெயர்ச்சி விழாவை ஒட்டுமொத்தமாக பாதிக்கச் செய்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான இறை வழிபாடு,  ஆளுநரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களை பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாக்கி கோயிலுக்கு வராமல் தடுக்கும் வகையில் இந்த முடிவுகள் உள்ளன.

பல்வேறு தரப்பினரும் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். இது குறித்து நீதிமன்றம் சென்று சட்ட ரீதியாக தளர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன். முயற்சி எடுப்பதாக அவர் கூறியுள்ளார். சனி பகவானுக்கே சனிப்பிடித்த சூழலை உருவாக்கியோரை பகவான் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.