நாகர்கோயில்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல் கட்சி தொடங்குவதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் தனது கட்சித் தொடக்கம் பற்றி ஏற்கனவே அறிவிப்பு விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இன்று நாகர்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கமலஹாசன் தனது கட்சியை அப்துல் கலாம் நினைவிடத்தில் தொடங்க வேண்டாம். அப்துல் கலாம் ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர். அவர் நினைவிடத்தில் கட்சி தொடங்குவது அவரை அவமானப் படுத்துவதாகவும் அவர் உணர்வுகளை கொச்சைப் படுத்துவதாகவும் அமைந்து விடும்” எனக் கூறினார்.