நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அனைவரும் எழுந்து நிற்க.. காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்ந்தே இருந்தது  சர்ச்சையாகியிருக்கிறது.

“தமிழை அவமானப்படுத்திவிட்டார் விஜயேந்திரர்” என்று பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுகின்றன.

“தமிழத்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது எமது மரபு அல்ல” என்று காஞ்சி மடம் விளக்கம் அளித்துள்ளது.

“அப்படியானால் தேசிய கீதத்துக்கு  மட்டும் எழுந்து நின்றது ஏன்” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின். அதோடு, த.பெ.தி..க. போன்ற பல அமைப்புகளும் விஜயந்திரருக்கு  கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமூகவலைதளங்களிலும் அவருக்கு எதிர்ப்புகள் குவிகின்றன.

ஆனால் இது குறித்து காஞ்சி மடத்துக்கு நெருக்கமான – இந்துத்துவா கட்சி என அறியப்படும் – பா.ஜ.க. கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,  தனக்கு இந்த விவகாரம் குறித்தே  தெரியாது என்று கூறியிருக்கிறார்.

“இரண்டு நாட்களாக பலரும் இது குறித்து கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். சமூகவலைதளங்களிலும் இதுதான் முக்கியமான விவாதப் பொருளாக ஆகியிருக்கிறது. உங்களுக்குத் தெரியாதா” என்று கேட்டதற்கு, “தெரியாது.. தெரியாது” எனச் சொல்லி சென்றுவிட்டார் தமிழிசை. பொதுவாகவே ஆக்ரோசமாக பேசும் எச்.ராஜாவும் மவுனம் காக்கிறார். இத்தனைக்கும் அவரது தந்தை எழுதிய நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்தான் இந்த சம்பவம் நடந்தது. அந்த மேடையில் இவரும் இருந்தார்.

காஞ்சிமடம் குறித்த விவகாரம் என்றால் “தீரத்துடன்” கருத்து வெளியிடும் இந்துமுன்னணி ராமகோபாலனும் ஏதும் பேசவில்லை.

இந்த நிலையில் காஞ்சி மடத்துக்கு நெருக்கமானவரும், தீவிர இந்துத்துவ நபராக அறியப்படுபவருமான இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தை தொடர்புகொண்டு பேசினோம்.

நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது அமர்ந்திருந்த விஜயேந்திரர்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், அவமதித்துவிட்டார் என்று காஞ்சி இளையமடாதிபதி விஜயேந்திரர் மீது புகார் எழுந்துள்ளதே..!

 நிச்சயமாக அவர் வேண்டுமென்று அப்படிச் செய்திருக்க மாட்டார். கவனக்குறைவாக இருக்கலாம். அந்நிய நாட்டில் பணம் வாங்கும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் இந்த விவகாரத்தை பெரிதாக்குகிறார்கள்.

சாதி மத பேதமின்றி பரவலாக அனைவருமே விஜயேந்திரருக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். சமூகவலைதளங்களைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். நீங்களும் ஒரு தமிழர் என்கிற முறையில் விஜயேந்திரரின் செயல் உங்களை வருத்தமடைய செய்யவில்லையா?

  (சில விநாடி நிதானித்து) எங்களைப் பொறுத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது உரிய மரியாதை அளிப்போம்.

 அந்த மரியாதையை விஜயேந்திரர் ஏன் அளிக்கவில்லை என்பதுதான் இப்போது முக்கிய கேள்வியாக எழுந்திருக்கிறது. தவிர, ஆழ்வார் ஆண்டாளை தமிழ்த்தாய் என்றும், அவரை அவமதித்ததன் மூலம் தமிழையே அவமதித்தவிட்டார் வைரமுத்து என்றும் இந்துத்துவாதிகள் பேசினார்கள்.. நீங்கள் உட்பட. இப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்திருப்பது உங்கள் வாதப்படி தமிழ்த்தாய் ஆண்டாளை அவமதித்தது ஆகாதா எனறும் விமர்சனம் எழுந்திருக்கிறதே!

 நிச்சமயாக சொல்கிறேன். தமிழை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அப்படி செய்திருக்க மாட்டார். காஞ்சிமடம் என்றால் ஏதோ தமிழுக்கு விரோதமானது என்பதைப்போல பிரிவினைவாதிகள், திராவிட இயக்கத்தவர்கள், நாத்திகர்கள் பொய்யுரை பரப்புகிறார்கள்.

உண்மையில் தமிழ் மீது தீராப் பற்றுள்ளது காஞ்சிமடம். மறைந்த காஞ்சி பெரியவர், தமிழில் மிக்க புலமை உள்ளவர். அதுமட்டுமல்ல.. இன்றளவும் தமிழிக்கு பெரும் தொண்டாற்றி வருகிறது காஞ்சி மடம்.

தமிழ்ப் பாசுரங்களை பாடும் ஓதுவார்களுக்கு மாத சம்பளம் அளிக்கிறது காஞ்சிமடம். அந்த ஓதுவார்களுக்கு தமிழ்ப்பாடல் பயிற்சி அளித்து, சிறந்தவர்களுக்கு வருடாவருடம் தங்க காப்பு  அன்பளிக்கிறது. தமிழ்ப்பாசுரங்களை மாணவர்கள் கற்க ஊக்குவிக்கும்படியாக, அவர்களுக்கு போட்டி நடத்தி பரிசளிக்கிறது.

ஆகவே காஞ்சிமடம் என்பது  தமிழுக்கு எதிரானது அல்ல. தமிழை அவமதிக்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லவே இல்லை. கவனக்குறைவாக விஜயேந்திரர் அமர்ந்திருக்கலாம். அவ்வளவுதான்.

(இந்த நேரத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது காஞ்சி மட மரபல்ல” என்ற மடத்தின் விளக்கம் வெளியாகிறது. இது குறித்து அர்ஜூன் சம்பத்திடம் கேட்டோம்.)

அதுதான் விளக்கம் சொல்லிவிட்டார்களே.. மரபல்ல என்று. ஒவ்வொரு மடத்துக்கும் உரிய மரபு இருக்கும் அல்லவா?

தேசியகீதத்தை பாடுவது, தேசியக்கொடியை வணங்குவது மரபல்ல என்று இஸ்லாமிய அமைப்புகள் சில கூறுகின்றன. அவற்றை ஏற்கிறீர்களா?

 அதைத்தான் நானும் கேட்கிறேன். அவர்கள் அப்படிக் கூறுவதை ஏன் யாரும் கண்டிப்பதில்லை?

  பலரும் கண்டிக்கவே செய்கிறார்கள். இப்போது நாம் கேட்பது.. நீங்கள் அந்த இஸ்லாமிய அமைப்பினரின் “மரபை” ஏற்கிறீர்களா?

தேசிய கீதத்துக்கு  அனைவரும் மரியாதை அளித்தே ஆகவேண்டும். அது சட்டம். குறிப்பிட்ட நிகழ்ச்சியில்கூட, தேசிய கீதத்துக்கு விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினாரே..!

அர்ஜூன் சம்பத்

அப்படியானால் சட்டம் சொன்னால் எழுந்து நிற்பார் என்று ஆகிறது. மகிழ்ச்சி. அதே போல தமிழ்த்தாய் வாழ்த்து, கடவுள் வாழ்த்து போன்றது என்று 1970ம் ஆண்டில் அரசு உத்தரவு (ஜி.ஓ.) போடப்பட்டிருக்கிறது. ஆக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவது அவசியம் அல்லவா?

 முதலில் நாம் ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“நீராருங் கடலுடுத்த..” என்ற மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் இந்த பாடலை தமிதமிழ்த்தாய் வாழ்த்தாக  1970ம் வருடம் கொண்டுவந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதிதான். அதற்கு முன்பு, “வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!  வாழிய பாரத மணித்திரு நாடு!” என்ற பாரதியார் பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக இருந்தது.

 அப்படியா?

அதாவது தமிழ்த்தாய் வாழ்த்துபோல அதுதான் ஒலிக்கப்பட்டது. ஆனால் கருணாநிதிதான் திடீரென மனோன்மனியனாரில் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து என்று அறிவித்தார்.

மற்றபடி அது தமிழ்த்தாய் வாழ்த்தே அல்ல.  அதில், “திராவிடநல் திருநாடும்” என்று வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏன் திராவிடம் வருகிறது..?

அதுமட்டுமல்ல… அந்த பாடல் நீளமானது.  அதை வெட்டி ஒட்டி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார் கருணாநிதி.  வெட்டப்பட்ட பகுதியில் “ஆரியம்போல் வழக்கொழிந்து.. “ என்ற வார்த்தையும் வருகிறது. அதாவது, இந்திய ஒருமைப்ப்பாடாட்டை எதிர்த்து, பிராமணர்களை எதிர்த்து, பிரிவினையைத் தூண்டும் வரிகள் இருக்கின்றன. அந்தப் பாடலை எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஏற்க முடியும்?

 உங்களது வாதப்படியே, அப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கமுடியாது என்றால்,  இது குறித்து கடந்த காலங்களில் நீங்கள் பேசியிருக்கலாமே. இப்போது விஜயேந்திரர் மரியாதை தரவில்லை என்கிற பிறகு பேச வேண்டியது ஏன்?

தற்போது இது தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிக்கப்பட்டிருப்பதால் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். செலுத்துவோம். ஆனால்  நிச்சயமாக நாங்கள் அப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கமாட்டோம்.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால், “வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!” என்ற பாரதியார் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிப்போம்.

 விரைவில் நீங்கள் ஆட்சிக்கு வர வாழ்த்துகள். இப்போதைய கேள்வி, தற்போதைய தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமரியாதை செய்ததாக எழுந்த விமர்சனம் குறித்துத்தான்..
  தற்போதைய தேசியக்கொடி மூவர்ண கொடிக்கு முன்பு வேறு கொடி இருந்தது. அதே போல ஜனகனமன தேசிய கீதத்துக்கு முன்பு வந்தேமாதரம் இருந்தது. பிறகு ஜனகனமன வந்தது. அது வெள்ளைக்காரனை வரவேற்று பாடினது. ஆனா அதையும் ஏத்துக்கிட்டாங்க.. அதுக்கான மரியாதை கொடுக்கிறோம்.
ஆக தேசிய கீதமோ, தமிழ்த்தாய் வாழ்த்தோ.. இருக்கும் வரை அதற்கான மரியாதையை அளிக்க வேண்டும். நாங்கள் அளிக்கிறோம். அதே நேரம் விஜயந்திரர்  அவமதிக்கும் நோக்கோடு அமர்ந்திருக்கவில்லை என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.
தவிர, இஸ்லாமியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை ஏற்கிறார்களா.. அதற்கு பதில் சொல்லுங்கள்.
 
 இஸ்லாமியரோ, விஜயேந்திரரோ அல்லது வேறு எந்த மதவாதியோ.. மத்த்தினரோ.. தமிழ்த்தாய் வாழ்த்தை மதிப்பதுதானே முறை.. அதே நேரம் இப்போது சர்ச்சையாகி இருப்பது விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார் என்பதுதானே…  மேலும் ஏற்கெனவே சங்கராச்சாரியார்கள் தமிழை நீச பாசை என்று கூறியதாகவும் சர்ச்சை உண்டு.. அதன் நீட்சியாவே தமிழ்த்தாய் வாழ்த்தை அவர் அவமரியாதை செய்ததாகவும் விமர்சனம் எழுந்துள்ளது..
 காஞ்சி மடத்தினர் யாரும் அப்படி சொல்லவே இல்லை. தவிர மடத்தினர் எவரும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கவில்லை. அவர்கள் தமிழின் மீது பெரும் பற்றுள்ளவர்கள்.  தேவையற்ற இந்த சர்ச்சையை யாரும் தொடராமல் இருப்பது நல்லது.

பேட்டி: டி.வி.எஸ். சோமு