சென்னை,

காஞ்சி இளைய மடாதிபதி, விஜயேந்திரர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல், இருக்கையில்  அமர்ந்திருந்து அவமதிப்பு செய்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசையிடம் கேட்டபோது.. தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது… என்று, கருத்து கூறாமல் நழுவினார்.

மீண்டும் அவரிடம், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் இதுகுறித்துதானே விவாதங்கள் நடை பெற்று வருகின்றன என்று கேட்டதற்கும், “எனக்கு எதுவும் தெரியாதுப்பா” என்று பதில் கூற மறுத்து எஸ்கேப்பானார்.

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், விழாவின் தொடக்கத்தின்போது இசைக்கப்பட்ட தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல், அமர்ந்திருந்து அவமதித்தார். ஆனால், நிகழ்ச்சியின் இறுதியில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.

விஜேயேந்திரரின் இந்த செயல் தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலை தளங்களில் அவர்மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களும்,  காஞ்சி இளைய மடாதிபதியின் அகங்கார செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு அசைவுக்கும் வாலண்டியராக வந்து பதிலடி கொடுத்து வரும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை,

விஜயேந்திரரின் தமிழ்த்தாய் அவமதிப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,  எதுவும் தெரியாது… என்றும், எனக்கு எதுவும் தெரியாதுப்பா” என்றும் கருத்துகூற மறுத்து, செய்தியாளர்களிடம் இருந்து நழுவி ஓடியது செய்தியாளர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.