சென்னை: ஓய்வுபெற்ற முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிமீது சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில்,  தமிழகஅரசு மற்றும் காதர் பாட்சா பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, கடந்த அதிமுக ஆட்சியின் சென்னை உயர்நீதிமன்றம்  தனி காவல்துறை குழுவை அமைத்தது. அதன் தலைவராக ஐஜி பொன்மாணிக்கவேலை நியமித்தது. அவர் தலைமையில் ஒரு குழு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்தது. சிலை கடத்தல் தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு டிஎஸ்பி காதர்பாட்சாவை பொன்மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2008ம் ஆண்டு விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சில ஐம்பொன் சிலைகள் காணாமல் போன விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு காதர்பாட்சாமீது குற்றம் சாட்டப்பட்டது. அவரும் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் என்பவரும் சேர்ந்து, அந்த சிலைகளை திருட்டுத்தனமாக விற்பனை செய்துள்ளதாக கூறப்பட்டு, இருவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சஸ்பெண்ட் ஆன காதர்பாட்சா தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்டார். அவர், தற்போது பிணையில் உள்ளார்.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் காவல்துறையில் அதிகாரிகளும் மாறினர். இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து, காதர்பாட்சா தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது மனுவில் பொன்மாணிக்க வேல் தன்மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன், காதர் பாட்சாவின் குற்றச்சாட்டு தொடர்பாக, சிபிஐ விசாரண நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதையடுத்து,  மனு மீது பதிலளிக்க தமிழகஅரசு  மற்றும் எதிர் மனுதாரர் காதர் பாட்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.