டெல்லி: 2014க்கு பிறகு 52%டீசல் வாகனங்கள் 18% ஆக குறைந்துள்ளது என கூறிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, டீசல் வாகனங்கள் மீது 10 சதவிகிதம்  மாசு வரி விதிக்கப்படும் என்றும்  தெரிவித்து உள்ளார்.

அதிகரித்து வரும் மாசை கட்டுப்படுத்தும் வகையில், டீசல்  மற்றும் பெட்ரோல் வாகனங்களை குறைக்க அறிவுறுத்தி உள்ள இந்திய அரசு, மாசு உருவாக்கும் டீசல் வாகங்களுக்கு மாசு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதுடன்,  மின்வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி,  முன்னாள் பெட்ரோலிய செயலாளர் தருண் கபூர் தலைமையிலான எரிசக்தி மாற்றத்திற்கான குழு,  வாகனங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த  ஆய்வறிக்கையில்,   2027 ஆம் ஆண்டுக்குள் பெரிய நகரங்களில் டீசலில் இயங்கும் வாகனங்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

மேலும், நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், டீசல் வாகனங்களை தடை செய்வது குறித்து விவாதம் நடந்து வருகிறது. ஆனால், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை அரசு இன்னும் ஏற்கவில்லை என்று  தெரிவித்தார்.

அத்துடன், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை படிப்படியாக நிறுத்த பரிந்துரைத்துள்ளது என்று கூறிய அமைச்சர்,  நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் அதிக அளவில் இயங்குகின்றன. அதே நேரத்தில், மின்சார வாகனங்களின் சகாப்தமும் தொடங்கியுள்ளது என்றவர், “2014க்கு பிறகு 52% (எண்ணிக்கை) டீசல் வாகனங்கள் 18% ஆக குறைந்துள்ளது என்றார்.

நாட்டில் தற்போது ஆட்டோமொபைல் துறை வளர்ந்து வருவதால் டீசல் வாகனங்கள் அதிகரிக்கக்கூடாது. டீசல் (வாகனம்) குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர்,  அது நடக்கவில்லை என்றால், அதிக மாசுபாட்டை உருவாக்கும் டீசல் வாகனங்களுக்கு  10% கூடுதல் வரி, அதாவது மாசு வரி விதிக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சருக்கு நான் பரிந்துரைக்கிறேன், என்றார்.