சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் அருளானந்தம், அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளவர் என்பது தெரிய வந்துள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பீடமாக செயல்பட்டு வரும் அமைச்சர்களில் ஒருவரான வேலுமணி உடனும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருபவர் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. அதற்கான ஆதாரங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வீடியோ, ஆடியோ வெளியாகி பொதுமக்களின் குலைநடுங்க வைத்தது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஆளும் அதிமுக அரசுமீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதலில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்றது. இநத பாலியல் குற்றச்சாட்டில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை: வாலன்டியராக வந்து சிக்கிய பொள்ளாச்சி ஜெயராமன்…
இந்த கொடூரமான சம்பவத்தில் அதிமுகவினர் சம்பந்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி கள் போராட்டம் நடத்தின. அதையடுத்து நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தொடர்ந்த விசாரணையை கையில் எடுத்த சிபிஐ, பாதிக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தும், 2 தனிக்குழுக்களை அமைத்தும் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது . குற்றவாளிகளுக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டு விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக சிபிஐ கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. பின்னர் இந்த வழக்கின் விசாரணை தொய்வடைந்தது. இதுகுறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன.
இந்த நிலையில், சிபிஐ தற்போது அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஏற்கனவே விசாரிக்கப்பட்ட பாபுவும், ஹெரோன் பால் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், அமைக்கவின் முக்கிய அமைச்சரான வேலுமணிக்கு மிகவும் வேண்டியவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், தமிழக துணைசபாநாயகராக இருந்துவரும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் வலதுகரமாக செயல்பட்டவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
தற்போது தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், பொள்ளாச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழாவில், பொள்ளாச்சி ஜெயராமனுடன் அருளானந்தமும் கலந்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். இவர், அ.தி.மு.கவின் பொள்ளாச்சி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல் போலச் செயல்படுபவர் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மேலும் பல அதிமுகவினர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.கவினர் அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து! அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்துக்கு அதிமுக உடந்தை! ஸ்டாலின்