சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுடன் உறவினர்கள் சந்தித்து பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வீதி மீறிய செயல்பட்ட  7 காவலர்களை சேலம் மாநகர காவல் ஆணையர்  நஜ்மல் ஹோடா சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு அரங்கேறியது. இதில் அதிமுக பெருந்தலை களின் உடன்பிறப்புகள் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதிமுக பிரமுகர் அருளானந்தம், ஹேரன்பால் பாபு, அருண்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கின்  விசாரணை கோவை மகிளா  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த  குற்றவாளிகளான வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிநாதன் ஆகியோரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.  வழக்கு விசாரணை நடைபெற்று பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் நகல்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

விசாரணையைத் தொடர்ந்து வழக்கு வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், குற்றவாளிகள் 5 பேரும் மீண்டும் சேலம் சிறைக்கு வாகனத்தில்  அழைத்து செல்லப்பட்டனர்.

சேலம் செல்லும் வழியில்  கருமத்தம்பட்டி பகுதியில் கைதிகள் சென்ற வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, வாகனத்தில் இருந்த கைதிகளை, கைதிகளின் உறவினர்கள் சிலர்  சந்தித்து பேசியுள்ளனர்.

இதை அந்த பகுதியில் இருந்த மர்ம நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ காட்சிகள் வைரலானாதால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து,  கைதிகளை சந்தக்க அவர்களின் உறவினர்களுக்கு சலுகை அளித்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ் குமார், ராஜேஷ் குமார், நடராஜன் மற்றும் கார்த்தி ஆகிய  7 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர்  நஜ்மல் ஹோடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.