சென்னை:  தீபாவளி பண்டிகையையொட்டி,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை

இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “பிரதமரின் ‘சுய சார்பு இந்தியா’ கொள்கையை பின்பற்றி தீபாவளியை கொண்டாடுவோம். தீபாவளி பண்டிகை அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

“மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன்‌ எனும்‌ அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படு கிறது. இந்த நாள்‌, இருள்‌ விலகி ஒளி பிறக்கும்‌ தினமாகவும்‌, தீமைகள்‌ அழிந்து நன்மைகள்‌ சுடர்விட்டு பிரகாசிக்கும்‌ தினமாகவும்‌ மக்களால்‌ கருதப்படுகிறது.  தீபாவளித்‌ திருநாளில்‌ மக்கள்‌ அதிகாலை எழுந்து எண்ணெய்‌ தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள்‌ இல்லங்களில்‌ தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார்‌ உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன்‌ கொண்டாடி மகிழ்வார்கள்‌.

தித்திக்கும்‌ இந்த தீபாவளித்‌ திருநாளில்‌, துன்பங்கள்‌ நீங்கி என்றும்‌ இன்பங்கள்‌ மலரும்‌ தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்‌. மக்கள்‌ அனைவரது வாழ்விலும்‌ இன்பம்‌ பெருகிட இறைவனின்‌ அருள்‌ கிடைக்கட்டும்‌. இன்று பெருகும்‌ இன்பம்‌ அனைவரிடமும்‌ என்றும்‌ நிலைக்கட்டும்‌. மக்கள்‌ அனைவரும்‌ எல்லா நலமும்‌, வளமும்‌ பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும்‌ என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌, புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில்‌, இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும்‌ ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

“மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற் காகத்தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை. கழனி செழித்தால் தான் மக்கள் மனமும் செழிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடின்றி தாராளமாக நடைபெற்று வந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் தோல்வியடைந்து விட்டது. அதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாட வேண்டிய உழவர்களின் மனங்கள், வருத்தத்திலும், ஏமாற்றத்திலும் துவண்டு கிடக்கின்றன.

இந்தியாவின் பல மாநிலங்களில் சமூகநீதி செயல்பாடுகள் நாலு கால் பாய்ச்சலில் வேகம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரு ஆண்டு களுக்கு முன் சறுக்கிக் கொண்ட சமூகநீதியை சரி செய்வதற்கு கூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள்,  படித்த இளைஞர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியடையும் வகையில் எந்த செயல்பாடும் நடைபெறவில்லை.

மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி,  வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும்,  மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று  வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,

“கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம்  உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக் கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

நாட்டிலும்,  வீட்டிலும் இருளை நீக்கி,  ஒளியை நிறைக்கும் தீபஒளித் திருநாள் இனி வரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சி யையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும். போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு  போன்றவை விலக வேண்டும் என்று கூறி  தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக தலைவர் டிடிவி தினகரன்

“நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன்‌ எனும்‌ அரக்கனை திருமால்‌ அழித்த இந்த தினமே தீபாவளிப்‌ பண்டிகையாக அனைவராலும்‌ கொண்டாடப்படுகிறது. அதர்மம்‌ என்றைக்கும்‌ நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள்‌ எனும்‌ இருளை விலக்கி, நன்மை எனும்‌ வெளிச்சத்தை பரப்பும்‌ இத்திருநாளில்‌ அனைவரிடத்திலும்‌ மகிழ்ச்சியும்‌, ஆரோக்கியமும்‌ நிறைந்து அன்பு தழைக்க எல்லாம்‌ வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்‌.

சாதி, மத பாகுபாடுகளை கடந்து ஒற்றுமை உணர்வை மக்கள்‌ மனதில்‌ ஏற்றும்‌ ஒளியாகவும்‌ இந்த தீபாவளி திருநாள்‌ அமைய, மீண்டும்‌ ஒருமுறை அனைவருக்கும்‌ எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.