சென்னை: அரசியல் கட்சியினர் மாஸ்க் அணியாமல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்வது கவலை அளிக்கிறது என்றும், அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து,  நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

“தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. மக்களே தயவு செய்து அலட்சியம் காட்டாதீர்கள்,கண்டிப்பாக முக்கவசம் அணியுங்கள்  என எச்சரிகை விடுத்துள்ளார்.

தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா, பஞ்சாப், குஜராத் உள்பட 9 மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. மகாராஷ்டிராவில் சில இடங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டு உள்ளது. அதுபோல தமிழகத்திலும் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடையேஎழுந்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தால், தேர்தல் பிரச்சார கூட்டங்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை யினர் கூறி வருகின்றனர். மேலும், கொரோனா பாதுகாப்பு  நெறிமுறைகளான முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை கடைபிடிப்பதில் பொதுமக்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,   அரசியல் கட்சியினர் மாஸ்க் அணியாமல் பிரசாரக்கூட்டங் களில் கலந்துகொள்வது கவலை அளிக்கிறது; அரசியல் கட்சியினர் மாஸ்க் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், யாருக்காவது காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும். சந்தை, பொதுப் போக்குவரத்து, கூட்டங்கள் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இனி வரும் நாட்களில் தடுப்பூசி மக்கள் அதிகளவு செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள். மக்கள் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். அலட்சியம் காண்பிக்க வேண்டாம். நோய்க்கான அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள். மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தடுப்பு மையங்களை மீண்டும் தொடங்க அதிகரிக்கப் பட்டுள்ளது.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி யுள்ளது. மக்கள் கவனக்குறைவாக இருந்தால் கொரோனா வைரஸ் கட்டாயம் பரவும். பொதுமக்களிடம் ஒத்துழைப்பு இருந்ததால் மட்டுமே டெங்கு நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஒழிக்கப்பட்டது. கடந்த நவம்பருக்கு பின்னர் எப்படி கொரோனா ஒழிக்கப்பட்டதோ, அதே ஒத்துழைப்பு மீண்டும் மக்கள் வழங்க வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பது சுகாதாரத்துறையின் நோக்கம் இல்லை. ஆனால், அபராதம் விதித்தால்தான் மக்கள் முகக்கவசம் அணிகிறார்கள் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டியது கட்டாயமாகிறது. கொரோனாவிற்கு ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என்று பாகுபாடு கிடையாது. 5 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடினாலே முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள் ” என்று தெரிவித்தார்.

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் கொரோனா  – தினசரி பாதிப்பு விவரம் குறித்த வரைபடம்