தேனி
தேனி மாவட்டத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் அவரை ஓ பன்னீர் செல்வம் ஜெயிக்க வைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அமமுக கட்சி சார்பாக டிடிவி தினகரன் இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என் அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இதில் ஒன்று சென்னை நகரில் டிடிவி தினகர ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள ஆர் கே நகர் எனவும் மற்றொரு தொகுதி தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியாக இருக்கும் எனவும் கூறி உள்ளனர்.
ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகையில் ஓ பன்னீர் செல்வம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். எனவே ஓ பன்னீர் செல்வம் தற்போது சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதால் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் உள்ளார் என அதிமுகவில் கூறப்படுகிறது.
இன்று தேனி மாவட்டத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூட்டத்தில், “நமது தேனி மாவட்டம் எம் ஜி ஆரை முதல்வர் ஆக்கி ஜெயலலிதாவை சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முதல்வர் ஆக்கி உள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஒரே அதிமுக உறுப்பினரை வெற்றி பெற வைத்ததும் தேனி மாவட்டம் ஆகும். இதன் மூலம் தேனி மாவட்டம் மீண்டும் அதிமுக கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள நன்கு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் தேனி பகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வென்றால் அது சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக ஓ பன்னீர் செல்வம் இருப்பதை உறுதிப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் ஒரு சில அதிமுகவினர் டிடிவி தினகரனை வெற்றி பெற ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெறச் செய்யலாம் எனவும் சந்தேகத்தில் உள்ளனர்.
அதே வேளையில் இன்று அமமுக வில் முதல் விருப்ப மனுவை அளித்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என அளித்துள்ளார். இதுவரை தாம் எங்குப் போட்டியிடுவோம் என்பதை டிடிவி தினகரன் கூறவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம் என்னும் மனநிலை பலர் மனதில் உள்ளது.