சென்னை:
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண்ணை கொன்ற கொலையாளி குறித்து காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, தொடர்ந்து சிலர் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றனர். சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் மர்ம நபரால் வெட்டிக்கொல்லப்பட்டார். பொது இடத்தில் நடந்த இந்த படுகொலை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கொலையாளியைக் கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் சிலர், கொலையாளி குறித்த தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
கொலை நடந்த மறுநாளில் இருந்தே, “பிலால் மாலிக்” என்பவன்தான் கொலையாளி என்று ஒரு வந்தியை சிலர் பரப்பினர். இவர்களில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற பிரபலங்களும் உண்டு. பிறகு எழுந்த கண்டனங்களாலும், அவரது சகலையான நடிகர் ரஜினிகாந்தின் அறிவுரையாலும் தான் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் ஒய்.ஜி. மகேந்திரன்.
இந்த நிலையில், “கொலையாளி குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல்துறை அறிவித்தது.
ஆனாலும் தொடர்ந்து சிலர் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, “அப்பாவி பிராமணப்பெண் சுவாதியை கொன்ற இஸ்லாமியன் பிலால் மாலிக் இவன்தான்” என்று வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள்.
இவர்கள் குறிப்பிட்ட படத்தில் இருக்கும் பிலால் மாலிக் தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கிறான். இரண்டு வருடங்களுக்கு முன், இந்து முன்னணி வேள்ளையப்பன் ஜி, ஆடிட்டர் ரமேஷ்ஜி ஆகியோரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவன் இவன்.
இவனது படத்தை பதிந்து, “இவன்தான் கொலையாளி” என்று சிலர் சமூகவலைதளங்களில் பகிர்வது திட்டமிட்ட செயலாகவே தோன்றுகிறது.
அதுமட்டுமல்ல.. தீவிர விசாரணையில் இருக்கும் போலீசாருக்கு இன்னும் குற்றவாளி குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் சிலர், “சுவாதி என்ற இந்து அப்பாவிப்பெண்ணை கொன்றது ஐ.எஸ். என்கிற இஸ்லாமிய பயங்கரவாதிகள்தான்” என்பது போன்ற வதந்திகளையும் சிலர் பரப்பி வருகிறார்கள்.
“இதுபோன்ற வதந்திகள் சமூக அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இப்படி வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அறிவித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது விழித்துக்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
வதந்தி பரப்புவோர் மீது இனியாவது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?