லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் கிறித்தவ ஆலயம் ஒன்றினுள்  இந்துத்துவா அமைப்பினர்  புகுந்து, பிரார்த்தனையை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உ,பியில் உள்ள மஹராஜ்கஞ்ச் மாவட்டத்திலிருக்கும்

டத்தாலி என்ற ஊரில் உள்ள கிறித்தவ ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில்  பத்துக்கும் மேற்பட்ட

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

அப்போது ஆலயத்துக்குள் போலீசாருடன் திடீரென்று புகுந்த யுவவாஹினி என்ற இந்துத்துவ இளைஞர் அமைப்பினர் பிரார்த்தனையை நிறுத்தும்படி கூச்சலிட்டனர்.

இதையடுத்து  மதபோதகரான யோகன்னன் ஆடாம் என்பவர் பிரசங்கத்தை நிறுத்தினார். போலீசார் வெளிநாட்டினரின் ஆவணங்களை பரிசோதனை நடத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், இது போன்ற கிறித்தவ நிகழ்ச்சிகள் இங்கே நடப்பது சகஜம்தான்,

ஆனால் இந்தப் பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு வெளிநாட்டினர் வந்திருப்பதால்  மதமாற்றம் நடப்பதாக யுவ வாஹினி அமைப்பினர் புகார் அளித்தனர்.

அதன்பேரில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.

ஆனால் மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது என மதபோதகர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கோரக்பூரில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது, சர்ச்சகளுக்கு வெளியே மதநிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று யுவ வாஹினி அமைப்பினர்  மதபோதகர்களை மிரட்டியதாக புகார் எழுந்தது நினைவுகூரத்தக்கது.

உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் தொடங்கிய அமைப்புதான் யுவவாஹினி  என்பது குறிப்பிடத்தக்கது.