டில்லி:

கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் இன ரீதியான தாக்குதல் சம்பவங்கள் அங்கு நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளன. பஞ்சாப் மாநிலம் ஹோசியர்புர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் ஜார்யால்  என்பவர் 25 நாட்களுக்கு முன்புதான் அமெரிக்காவிற்கு வேலைக்கு சென்றார்.

வாஷிங்டன் யாஹிமாவில் பெட்ரோல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழனன்று வெளியே சென்று கொண்டிருந்த அவரை முகமூடி கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளனர்.

அவரிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

படுகாயமடைந்த விக்ரம் ஜார்யால், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்க்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஜார்யாலின் சகோதரர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.தன் சகோதரர் உடலை இந்தியா கொண்டுவர உதவி புரியுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள சுஷ்மா, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக  இந்தியா அனைத்து வகையிலும் ஒத்துழைக்கும் என்றும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.