சென்னை: தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் விற்பனை போன்றவை கட்டுப்பாடற்ற வகையில் காணப்படும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 10 படுகொலைகள் நடந்தேறியுள்ளது. ஏற்கனவே பதற்றத்துக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் கொலை செம்பவங்கள், தமிழ்நாட்டில் காவல்துறை செயலிழந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளது.
நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன?: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் சாதி வன்முறை தலைவிரித்தாடியது. அதன் தொடர்ச்சியாக ஏராளமான கொலை சம்பவங்கள் அரங்கேறின. பின்னர், அவை மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் கொலை சம்பவங்கங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்படுவதுடன், மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் அற்ப காரணங்களுக்காக 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதமே திருநெல்வேலியில் நான்கு படுகொலை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது மாவட்டம் முழுவதும்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இது மாவட்ட மக்களிடைய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டை மயிலப்பபுரம் பிச்சையா, சுத்தமல்லியில் கொம்பையா, மேலவீரராகவபுரம் மகேஸ், மேலநத்தம் மாயாண்டி, வீரவநல்லூர் அருணாச்சலகுமார் உட்பட 10 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு கீழுள்ளவர்கள். தற்போது இவர்களது குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதுபோன்ற கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறினாலும், கொலை சம்பவங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு சான்றுதான் தற்போது நடைபெற்றுள்ள மாணவர்களின் கொலை முயற்சி சம்பவம். இதனால் காவல்துறை செயலிழந்து விட்டதாகவே சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது. இருப்பினும் அதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. மதுபானக் கடைகளால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. இதனால், கொலை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
காவல் துறையின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன. இதனால் அவர்களால் செயல்படாத நிலை உள்ளது. நாங்குனேரியில் நடைபெற்ற கொலை முயற்சி சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த பிரமுகரின் மகனும் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்று தெரிவித்தார்.
நாங்குநேரி சம்பவம் தொடர்பாக, டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், நாங்குநேரியில் மாணவர்களுக்கு இடையே பள்ளி வளாகத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பின் மாணவரின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார். இதை மனதில் வைத்து ஆகஸ்ட்.9-ம் தேதி அந்த மாணவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளஞ்சிறார்கள், அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தி உள்ளனர். தடுக்க வந்த மாணவரின் தங்கையையும் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவனும், அவருடைய தங்கையும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றச் செயலில் ஈடுபட்ட 6 இளஞ்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மாணவ மாணவியர்களிடையே பள்ளி கல்லூரிகளில் காவல்துறை, கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.