இருட்டு அறையில் இருபது வருடங்கள் : கோவாவில் பெண் மீட்பு

ண்டோலிம், கோவா

னது குடும்பத்தினரால் இருபது வருடங்களுக்கு மேல் ஒரு இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் போலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

கண்டோலிம் கோவாவில் உள்ள ஒரு அழகிய ஊர்.  அங்குள்ள பீச் ரிசார்ட்டுகளில் எப்போதும் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படும்.  அதே ஊரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் (தற்போது தனது ஐம்பதுகளில் உள்ளவர்) வசித்து வந்தார்.  மும்பையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்றார்.  அங்கு அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அவர் கணவர் ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியுடன் வசித்து வந்தார்.  அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இவர், தன் கணவரிடம் வாழ விருப்பமின்றி, பிறந்த ஊரான கண்டோலிம் வந்தார்.  விஷயத்தை கேள்விப்பட்ட பெற்றோரும், சகோதரர்களும் அதிர்ந்தனர்.  அதே நேரத்தில் தனது மகள் வாழாவெட்டியாக வீட்டில் இருந்தால் மற்றவர்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகலாம் எனவும் கவலைப்பட்டனர்.  இந்த நேரத்தில், அந்தப் பெண் மன உளைச்சலால் அசாதாரண முறையில் நடந்துக் கொள்ளத் தொடங்கினார்.

எனவே பெற்றொரும், சகோதரர்களும் அவரை வீட்டின் பின்புறமுள்ள ஒரு தனியறையில் பூட்டி வைத்தனர்.  ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே அந்த இருட்டறையில் திறந்திருக்கும்.  அதன் மூலமாகவே அந்தப் பெண்ணுக்கு உணவும், குடிநீரும் வழங்கப்பட்டது.  இது ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல, இருபது வருடங்களுக்கும் மேல் நிகழ்ந்தது.  அவருடைய இரு சகோதரர்களும் முன்னால் உள்ள வீட்டில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

ஒரு சமூக நல நிறுவனத்துக்கு  அடையாளம் தெரிவிக்காத ஒருவர் ஈ மெயில் மூலம் இந்த தகவலை அனுப்பியுள்ளார்.  அவர்கள் போலீஸ் உதவியுடன் அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர்.  அந்த அறை மிகவும் தூசியும், அழுக்குமாக இருந்தது.   முழு நிர்வாணமாக இருந்தார் அந்தப் பெண்.  அவருக்கு உடை அணிவித்து போலிஸ் வெளியே அழைத்து வந்தனர்.  முதலில் வெளியே வர மறுத்த அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அவரை மனநல சிகிச்சை மையத்தில் போலீசார் அட்மிட் செய்தனர்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.

படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி தன்னைத்தானே அடைத்துக் கொண்டது திரைக்கதை.  ஆனால் தனது சகோதரர்களாலேயே இந்தப் பெண் அடைபட்டுக் கிடந்தது நிஜக்கதை.  இனியாவது அந்தப் பெண் மற்ற பெண்களைப் போல வாழ்வாளா என்பது விடுகதை.

 


English Summary
Police rescued a woman locked in a dark room for 20 years at Goa