கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம், அதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் கோவையின் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்த செயல் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த வழக்கில் கைதான 5 பேரின் வீடுகளில் இன்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை, கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள், கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், அந்த காரில் குண்டு இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்து  100 கிலோ வெடிமருந்துகள், டைரி, லேப்டாப், மொபைல் என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவரது டைரியை ஆய்வு செய்தபோது, கோவையின் முக்கிய 5 பகுதிகளில் வெடிகுண்டு வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டது தெரிய வந்தது. இதை யடுத்து,  முபினுக்கு உதவியதாக 5 இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள  முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரில், அப்சர்கான தவிர மற்ற 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!