போர்ட் பிளேர், அந்தமான்
மின் தடைக்கு எதிராக அந்தமான் ஆளுனர் மாளிகை எதிரே போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி போலீஸ் விரட்டி அடித்துள்ளது.
அந்தமானில் மின் தடை அதிகமாகி வருகிறது. முதலில் ஒரு நாளில் சில மணி நேரம் மின் தடை இருந்ததற்கு பதில் இப்போது ஒரு சில மணி நேரமே மின்சாரம் வருகிறது. மக்கள் இதனால் பெரும் துயரம் அடைந்துள்ளனர். பல முறை கேட்டும் யாரும் எந்த பதிலும் சொல்லாலததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
பொது மக்கள் ஒன்று கூடி அந்தமான் தலை நகர் போர்ட் பிளேரில் உள்ள லெஃப்டினெண்ட் கவர்னர் இல்லமான ராஜ் நிவாஸ் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன. மின்சார நிலையை சரி செய்ய இயலாத லெஃப்டினெண்ட் கவர்னரை திரும்பப் போகுமாறு போராட்டக் காரர்கள் கூக்குரல் எழுப்பினர்.
அவர்களை அங்கிருந்து கலையச் சொல்லி வற்புறுத்தியும் கலையவில்லை. ஆகவே போலீசார் மக்கள் மீது பலத்த தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். தடியடியால் பலரும் காயம் அடைந்து அந்த இடமே ஒரு போர்க்களம் போல காணப் பட்டது. அபார்தீன் என்பவர் தலையில் அடிபட்டு அபாய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வளவு களேபரத்துக்குப் பின் மின் வாரியம் மின் பற்றாக்குறை இருப்பது உண்மைதான் என்றும், அது விரைவில் சரி செய்யப்பட உள்ளதால் மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் கூறி உள்ளது.