‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் கொட்டித்தீர்த்த மழை கடந்த 5ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஓய்ந்த போதும் மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமலேயே உள்ளது.

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நிலையில் மாநகராட்சி ஊழியர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் களப்பணி ஆற்றி வருவதுடன் வெளிமாவட்ட நகராட்சி பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்பு எதிர்பார்த்ததை விட அதிகளவு இருந்ததை அடுத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில் தன்னார்வலர்களையும் இந்த மீட்பு பணியில் ஈடுபட நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

அதேவேளையில், வெள்ள பாதிப்பை தெரிந்துகொள்ள முடியாமல் ஓரிரு நாட்கள் சமாளித்து விடலாம் என்று சிக்கிக் கொண்ட குடியிருப்பு வாசிகள் தற்போது அங்கிருந்து வெளியேற தவித்து வருகின்றனர்.

துரைப்பாக்கம் காவல்நிலைய தலைமைக் காவலர் தயாளன் வெள்ளத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன் நடந்து வரும் காட்சி

இந்த நிலையில் சென்னையின் மையப் பகுதிகள் தவிர வேளச்சேரி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மீட்பு நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகிறது.

சென்னை துரைப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட விபிஜி நகரில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ள நீரில் இருந்து அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகளை மீட்ட காவல்துறையினர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்தனர்.