சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதற்கட்ட நிவாரண நிதி வழங்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், புயல் பாதிப்புகளை  விளக்கி இடைக்கால நிவாரணத் தொகை கோரும் கோரிக்கை மனுவை  வழங்கினார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

பின்னர், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது,

“சென்னை நகரமும், மக்களும் இயல்பு நிலைக்கு வர தொடங்கியிருக்கிறார்கள். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து களப்பணி ஆற்றி வருகிறோம்.

தமிழகஅரசு எடுத்திருக்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், இந்த பெருமழையிலும் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப்பட்டி ருக்கிறது என்றவர்,  சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் ஆகிய பொது கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5060 கோடியை வழங்கிடுமாறு பிரதமருக்கு ஏற்கெனவே நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதனை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக இன்று 450கோடி ரூபாயை அளித்தமைக்கு, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்த பேசியவர், புயல் மழை பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சர் மற்றும் மத்திய அரசு அலுவலர்களுக்கும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட தமிழக அரசு அலுவலர்கள் விரிவாக எடுத்து கூறியுள்ளனர். நமது கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றையும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கொடுத்துள்ளேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்திட மத்திய அரசின் குழு ஒன்றும் தமிழகத்துக்கு வர இருப்பதாக கூறியவர்,  தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து மத்திய அரசு விரைவில் வழங்கிடும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்றார்.

மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாகவும்,  அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.