சென்னை: உள்கட்சி பிரச்சினையால் பாஜக மகளிர் அணி பிரமுகர் தாக்கப்பட்ட விஷயத்தில், பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய காவல்துறையினர் தேடி வரகின்றனர்.

அமர்பிரசாத் ரெட்டிமீது வன்கொடுமை உள்பட 9 பிரிவில் வழக்கு செய்து அவரை தேடி வரும் காவல்துறையினர்,  வேலைக்கார பெண்ணை வன்கொடுமை செய்து மிரட்டி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகனையும், மருமகளையும் கைது செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பது வேதனைக்குரியது.

கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கடந்த 19ந்தேதி சென்னை வந்தார். அப்போது, கூட்டம் சேர்க்க, பணம் கொடுத்து ஆட்களை திரட்ட  சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் தேவி என்பவர் மூலம் பாஜக ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதனையொட்டி சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது கூறி பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஆட்களை அழைத்து வராத காரணத்தால் ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.  தேவியின்  தங்கை ஆண்டாள் பாஜகவில் மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார்.

இதனை அடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவி மற்றும் அவரது தங்கை ஆண்டாளை சரமாரி தாக்கியுள்ளனர். அப்போது அமர்பிரசாத் ரெட்டியிடம் இருந்து நீங்கள் வாங்கி வந்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்டதுடன் இதனை வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. மேலும் அமர் பிரசாத் ரெட்டி சொன்னதன் காரணமாகத்தான் உங்களை அடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காயமடைந்த தேவியை அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தேவி அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுனர் ஸ்ரீதர் மற்றும் பாஜக நிர்வாகி நிவேதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை பதிவு செய்துள்ள காவல்துறையினர்,  அமர்பிரசாத் ரெட்டி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பாஜக துணைத் தலைவர் ஸ்ரீதர், பாஜக பெண் நிர்வாகிகள் நிவேதா கஸ்தூரி உள்ளிட்டோர் மீது மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை கிழக்கு மண்டல் பாஜக துணை தலைவர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தேவியை தாக்கியது, அமர்பிரசாத் ரெட்டியின்  கார் டிரைவர்  உள்பட வேறு சிலர் என்ற நிலையிர், , காவல்துறையினர் அமர்பிரசாத் ரெட்டிமீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய துடிப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், வேலைக்கார பெண் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்ந்தி வருவதாகவும், ஆனால் அமரை கைது செய்ய துடிப்பதாகவும் விமர்சித்து உள்ளனர்.