மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் சிட்டி கவுன்சில் தேர்தலில் வாக்குச் சீட்டிலிருந்து எதிர்க்கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாஸ்கோவில் நடந்துவரும் ஆர்ப்பாட்டத்தை காவல்துறை கடுமையாக ஒடுக்கியுள்ளது.

காவல்துறையால் போராட்டக்காரர்கள் சிலமுறை தாக்கப்பட்டதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிலையமும் காவல்துறையால் முடக்கப்பட்டது.

மாஸ்கோவின் மேயர் அலுவலகத்தைச் சுற்றி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இதுவரை 1074 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திச் சேனல் ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் போராட்டம் 7 மணிநேரங்களுக்கு மேல் நீடித்தது.

கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்பிய பல எதிர்க்கட்சி போராட்டக்காரர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டுவிட்டனர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நாவல்னி, அனுமதிக்கப்படாத போரட்டத்திற்கு அழைப்பு விடுத்த குற்றத்திற்காக 30 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
‘ரஷ்யா விடுதலை அடையும்!’ மற்றும் ‘தாக்குவதற்கு நீங்கள் யார்?’ என்பன போன்ற கோஷங்களை கூட்டத்தினர் எழுப்பினர் என்று தகவல்கள் கூறுகின்றன.