திருவாவடுதுறை
சமூக வலைத் தளங்களில் போலியான செய்தி வெளியானதாக திருவாவடுதுறை ஆதீன பொது மேலாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
மிகவும் பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீன திருமடம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அமைந்துள்ளது. ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் இந்த ஆதீனத்தின் குருமகா சன்னிதானமாக இருந்து வருகிறார். நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற இவர் பிரதமரிடம் செங்கோலை வழங்கினார்.
நேற்று சமூக வலைத் தளங்களில் ஒரு போலியான செய்தி பகிரப்பட்டது. அதில் செங்கோல் வழங்கிய நிகழ்வையும் ஒடிசா ரயில் விபத்தையும் சம்பந்தப்படுத்தி திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் கருத்து கூறியதாகக் காணப்பட்டது.
இதையொட்டி ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத் தளங்களில் போலியான செய்தியைப் பதிவிட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன் புகார் மனு அளித்துள்ளார்.