போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களின் லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது. அப்போது போலீசாரே ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே? அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபற்றி கோர்ட்டில் பதில் அளித்த போலீசார் ஹெல்மெட் அணியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது மீண்டும் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹெல்மெட் அணியாத போலீசாரை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.