விழுப்புரம்:
விழுப்புரத்தில் திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் ரஹீம் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருடைய மனைவி விஜயலட்சுமி, இவர்களின் கடைசி மகன் தினேஷ். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் தினேஷ் தற்போது கொரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தினேஷ் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்குக் கொடிக் கம்பங்களை நடும் வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த திமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காகக் கட்சியினரை வரவேற்க திமுக கொடிக் கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தினேஷ் மேலே இருந்த மின்சாரக் கம்பியைப் பார்க்காமல் கம்பத்தை நட்டுள்ளார். இதனால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தினேஷை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு தினேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் 174 மின்சாரம் தாக்கி உயிரிழத்தல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், விழுப்புரத்தில் திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.