சென்னை: திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றும், தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது, ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். அதுபோல, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் காவல்துறை தனது தன்மையை இழக்க தொடங்கிவிட்டது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, வன்முறை, போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடலூர் அருகே உதவி ஜெயிலரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரவுடிகளின் நேரடி மிரட்டல் காவல்துறையில் பணியாற்றி வருபவர்களின் உயிருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப் பொருள் பயன்பாடு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நரிக்கு நாட்டாமை கொடுத்தால், கிடைக்கு இரண்டாடு கேட்குமாம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் இந்த திறமையற்ற திமுக ஆட்சி தறிகெட்டு ஓடுகிறது. விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, மாணவிகள் உள்ளிட்டோர் மீதான பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது.
சமூக விரோத சக்திகளும், கொடுஞ்செயல் புரிவோரும் இந்த ஆட்சி தங்களுக்கு லைசென்ஸ் வழங்கியது போல் பல்வேறு குற்றங்களைப் புரிந்து, மக்களை மிரட்டி வருகிறார்கள். காவலர் பாதுகாப்புடன் கூடிய காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள உதவி ஜெயிவர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். உதவி ஜெயிலர் வெளியூர் சென்றிருந்ததாலும், அவருடைய குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்ததாலும் உயிர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்திலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், போதைப் பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை தாராளமாகக் கிடைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம், சமூக விரோதிகள் சகல வசதிகளுடன் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் ராஜநடை போடுகிறார்கள். இந்த விடியா ஆட்சி என்று அகற்றப்படுமோ அன்றுதான் எங்களுக்கு முழு சுதந்திரம் என்று தமிழக மக்கள் அலறல் எழும்புகிறது.
எனவே, மக்களைப் பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத் தவறிய இந்த ஆட்சியாளர்கள், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்தெழு வேண்டும். மக்களை மட்டுமல்ல, அவர்களை பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத் தவறிவிட்டது திமுக ஆட்சி. ரவுடிகளை திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோல மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் சோர்வுடனும் மனச்சோர்வுடனும் காவல்துறையில் பணியாற்றி வரும் சகோதர சகோதரிகளின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு திமுக அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கையில், ‘பண்டிகை நாள், விடுமுறை நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள் என்று எந்த தினமாக இருப்பினும் மக்களை காக்கும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் குறை தீர்ப்பாளர்கள் நமது காவல்துறை நண்பர்கள்.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் காவல்துறை தனது தன்மையை இழக்க தொடங்கிவிட்டது. காவல்துறை கோபாலபுரம் குடும்பத்திற்கும், திமுக அமைச்சர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை கையாளும் ஏவல் துறையாக மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினரை தரம் தாழ்த்தி திமுகவுடன் நடத்துவதை கண்கூடாகவே பல இடங்களில் பார்த்தோம். திமுக கவுன்சிலரின் கணவர் என ஒருவர் காவலரிடம் தரக்குறைவாக பேசுவது இணையத்தில் வயதானது அனைவரும் அறிந்ததே.
திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இப்படி இருக்கையில் காவல்துறையினர் தங்கள் கடமையை திறம்பட செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மேலும் தமிழகத்தில் காவல்துறையில் உள்ள சுமார் 12,000 காலியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பிட வழிவகை செய்ய வேண்டும். வெள்ளையர்களின் காலம் முதல் இன்று வரை காவல்துறையின் மாண்பை சீரழித்த ஆட்சிகள் சீரழிந்து போனது. வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடம்.
சாமானிய மக்களின் அரணாகவும் நமது நாட்டின் சட்ட திட்டங்களை தாங்கி பிடிக்கும் தூணாகவும் இருக்கும் நமது காவல்துறை நண்பர்கள். அரசியல் குறுக்கீடுகள் இன்றி காவல்துறையினர் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை உருவாக்குவது காலத்தின் கட்டாயமும், அரசின் கடமை ஆகும் .
இவ்வாறு கூறி உள்ளனர்.