அரசு வழங்கிய பி.எஸ்.என்.எல் கார்டுகளை பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

Must read

காவல்துறையினர் பயன்படுத்தும் அரசால் வழங்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் சிம் கார்டுகளை, பயன்படுத்த தவறினால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போச்சம்பள்ளி சரக தலைமை நிறுவ அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலர்களும், அவர்களது குடும்பத்தாரும் பயன்படுத்த காவல்துறையால் பி.எஸ்.என்.எல் சிம் கார்டுகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவை சரிவர பயன்படுத்தப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக போச்சம்பள்ளி சரக தலைமை நிறுவ அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாடு காவல்துறையால் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கும் BSNL CUG – SIM வழங்கப்பட்டது. காவல்துறையால் வழங்கப்பட்ட சிம் கார்டை, அதிகப்படியான நபர்கள் பயன்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு அவ்வப்போது குற்றச்சாட்டு தெரியவருகிறது. அரசால் வழங்கப்பட்ட சிம் கார்டை பெற்று, சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பது ஒழுங்கீனமான செயல் ஆகும். CUG – SIM-ஐ பெற்று, பயன்படுத்தாத நபர்கள் யார் ? மற்றும் பயன்படுத்தும் நபர்கள் யார் ? என்கிற விபரத்தை தலைமை அலுவலகத்தில் தெரியப்படுத்தவும்.

கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையில் பணிபுரியும் மேற்கண்ட அனைவரும், மேற்படித் தவறை செய்யத் தெரியவரும்போது, இச்செயல் ஒழுங்கீனத்தை வெளிப்படுத்தும். அப்படி தெரியவரும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான சேவை காரணமாக காவல்துறை வழங்கிய பி.எஸ்.என்.எல் சிம் கார்டுகளை காலப்போக்கில் மாற்றிவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கும் நிலையில், அவர்களை ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க்கை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று போச்சம்பள்ளி காவல்துறை சரக தலைமை நிறுவ அலுவலகம் உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article