ருள்மிகு பொய்யாளம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், ஒக்கூரில் அமைந்துள்ளது.

இப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு, தாதியாக இருந்து பிரசவம் பார்ப்பது பொய்யாளம்மன்தான். இக்குடும்பத்தை சேர்ந்த கர்ப்பமான பெண்கள் பிரசவ காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இவ்வூருக்கு வந்து விடுகின்றனர். கருவுற்ற காலங்களில் இவர்கள் எந்த டாக்டரையும் நாடுவதில்லை. பொய்யாளம்மனின் விபூதியையே மருந்தாக உட்கொள்கின்றனர். பின்னர் பிரசவ வலி வரும் சமயத்தில் பொய்யாளம்மன் கோயில் கருவறைக்கு முன்பாக வெட்ட வெளியில் கருவுற்ற பெண்ணை கொண்டு வந்து தனியாக விட்டு விடுகின்றனர். பின்பு அனைவரும் கோயிலுக்கு வெளியே வந்து விடுகின்றனர். கோயில் கதவுகள் சாத்தப்பட்டு விடுகின்றன. கருவுற்ற பெண் அம்மனின் அருளால் தானாக குழந்தையை ஈன்றெடுக்கிறாள். குழந்தை பிறந்த பிறகு, தாங்களும் சுத்தமாகி, குழந்தையை குளிப்பாட்டி, மற்றும் பேறுகாலத்தில் செய்ய வேண்டியவற்றையும் தானாகவே செய்து கொள்கின்றனர். பின்னர் அவர்களுக்காக கோயிலுக்கு அருகில் வெட்ட வெளியில் அமைக்கப்பட்டுள்ள குடிசைக்குச் சென்று ஒன்பது நாட்கள் தங்கி இருக்கின்றனர். வெயில், மழை பாராது அக்குடிலிலேயே ஒன்பது நாள் இருந்து பின் வீட்டிற்கு செல்கின்றனர். குழந்தை பிறந்த முதல்நாள் முழுவதும் பிரசவம் நடந்த பெண்ணை யாரும் பார்ப்பதில்லை.

இரண்டாம் நாள் முதல் கோயில் பூசாரி வீட்டை சேர்ந்த திருமணமான பெண் யாரேனும் ஒருவர் மட்டும் சென்று உணவு கொடுத்து விட்டு திரும்புகிறார். ஒன்பது நாட்களுக்கு பிறகுதான் தாயையும், சேயையும், கணவனோ, பெண்ணின் பெற்றோர்களோ, உறவினர்களோ பார்க்க முடியும். பிரசவத்தின் போதும், அதைத் தொடர்ந்த ஒன்பது நாட்களும் அம்மனே அந்தப் பெண்ணுக்கு தாயாக இருந்து கவனித்துக் கொள்கிறாள் என்பது இந்த மக்களின் நம்பிக்கை.

அறிவியலில் ஒருபுறம் அதிசயங்கள் நடந்து கொண்டிருக்க ஆன்மிகம் அதனுடன் பெரும் போட்டி போடுகிறது. அதிசயங்களை எல்லாம் மிஞ்சும் ஒரு அதிசயம் இப்போதும் ஆவுடையார் கோயில் அருகே உள்ள பொய்யாளம்மன் கோயிலில் நடந்து வருகிறது. அதுதான் அம்பாளே பிரசவம் பார்க்கும் அதிசயம். இன்றுவரை ஒரு பிரசவம் காரணமாக ஒரு உயிருக்குகூட சேதம் ஏற்பட்டதில்லை. இந்த அம்மனை நம்பிய பிரசவங்கள் பொய்த்ததில்லை என்பதால் தான், அம்மனுக்கு “பொய்யாளம்மன்” எனப் பெயர் வந்தது எனவும் கூறுகிறனர். இங்கு பிரசவம் நடந்தால், எந்த மருந்தும், மாத்திரையும், டாக்டர்களும் இல்லாமல் தாயும், சேயும், நலமாக, ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது இவர்கள் நம்பிக்கை.

ஆவுடையார் கோயிலில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள சிற்றூர் ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோயில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது. பொய்யாளம்மனைக் குல தெய்வமாக கொண்டு ஒக்கூர், மறவநேந்தல், பேராவலல், தச்சமல்லி, நரிக்குடி, ஆலத்தி வயல் உட்பட பல்வேறு கிராமங்களில் சுமார் 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

கோயிலில் தலைப் பிரசவம் நடந்தால் அவர்கள் பூக்குழி இறங்கியும், அடுத்தடுத்து பிரசவங்களுக்கு பால்குடம், காவடி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.