டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசுத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வக்கீல் வினீத் தண்டா தாக்கல் பொது நல மனு ஒன்று விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், ‘‘ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான பிஎன்பி கடன் மோசடியை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நிரவ் மோடியை நாட்டிற்குள் அழைத்து வர உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணையின் போது மத்திய அரசு வக்கீல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘‘சிபிஐ, அமலாக்க பிரிவு, வருமான வரித் துறையின் தீவிர மோசடி புலனாய்வு பிரிவு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

‘‘நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்துவது உகந்ததா? இல்லையா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.