டில்லி:

இந்த கல்வி ஆண்டு முதல் ஐஐடி.க்களில் மகளிருக்கு 779 இடங்கள் என வழக்கத்தை விட உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பி.டெக் பாடப்பிரிவுகளில் மகளிர் சேர்க்கை சதவீதம் குறைவாக உள்ளது.

இதை அதிகரிக்கும் நோக்கத்தோடு இந்த உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட மாணவிகளின் சேர்க்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மே 20ம் தேதி ஜேஇஇ அட்வாண்ஸ்டு ரேர்வு நடக்கிறது.

 

ஐஐடி காராக்பூரில் 113 சீட், ஐஐடி தன்பாத்தில் 95 சீட், ஐஐடி கான்பூரில் 79 சீட், ஐஐடி ரூர்கியில் 68 சீட், ஐஐடி டில்லியில் 59 சீட், ஐஐடி கவுகாத்தியில் 57 சீட் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மகளிர் சேர்க்கை என்பது 8 முதல் 9 சதவீதம் மட்டுமே இருந்து வருகிறது. முதுகலை பாடப்பிரிவுகளில் இது 22 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டு 23 ஐஐடி.க்களின் பி.டெக் பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட 10,987 பேரில் 1,006 பேர் மட்டுமே பெண்கள். அதனால் மாணவிகளுக்கு என்று பிரத்யேக இடங்களை ஏற்படுத்த ஐஐடி கவுன்சில் கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி முடிவு செய்தது.

2018ல் 14 சதவீதமும், 2019ல் 17 சதவீதமும், 2020ல் 20 சதவீதமும் மாணவிகள் சேர்க்கையை உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 779 சீட் என்பது 14 சதவீதமாகும்.