சென்னை: வேளாண் சட்டங்கள் வாபஸ் என்பது, விவசாயிகளுக்கும்காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. வரவிருக்கும் தேர்தல்களுக்கு பயந்து அறிவிக்கப்பட்டு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “நாங்கள் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் சட்டத்தை ரத்து செய்வதற்கான செயல்முறையை நாங்கள் முடிப்போம்” என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பு ஒருபுறம் வரவேற்கப்படும் நிலையில், மற்றொரு புறம் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. நடை பெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி மற்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப், உ.பி. உள்பட 5 மாநில சட்ட மன்ற தேர்தல் மற்றும் 2023ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தவிர்க்கும் வகையிலேயே, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்து உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மோடியின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,
ஜனநாயக போராட்டங்களால் சாதிக்க முடியாததை, வரவிருக்கும் தேர்தல்களுக்கு பயந்து சாதிக்க முடியும்!
மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்த பிரதமரின் அறிவிப்பு, கொள்கை மாற்றத்தினாலோ அல்லது மனமாற்றத்தினாலோ ஈர்க்கப்படவில்லை.
இது தேர்தல் பயத்தால் தூண்டப்படுகிறது!
எது எப்படியோ, விவசாயிகளுக்கும், விவசாயச் சட்டங்களுக்கு எதிராக அசையாத காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.