பாட்டாளி மக்கள் கட்சியை தனி கவனத்துடன் குறிவைத்து அதன் செல்வாக்கை சிதைக்கிறாரோ ஸ்டாலின்? என்ற கேள்வி எழும் வகையிலேயே, சில தேர்தல் முடிவுகள் அமைகின்றன.

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் சந்தித்த பாமக, 30 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களை வென்றது. அதுதான் பாமகவின் கடைசி வெற்றிகரமான தேர்தல் எனலாம்.

அதன்பிறகு, திமுகவுடன் முரண்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், தன் மகன் அன்புமணி மத்திய காங்கிரஸ் அரசில் கேபினெட் அமைச்சராக இருக்கும்போதே, அதிமுக கூட்டணிதான் வெல்லும் என தவறாக கணித்து, அந்த அணியில் இணைகிறார்.

அதிமுக கூட்டணியில், 7 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை தொகுதிக்கு உடன்பாடு ஏற்படுகிறது.

அப்போது, வெறும் 96 சட்டமன்ற இடங்களை மட்டுமே பெற்றிருந்த திமுக, காங்கிரஸ் கட்சியின் 34 உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழக அரசை நடத்தி வந்தது. கம்யூனிஸ்டுகளும் திமுக கூட்டணியை விட்டு விலகிவிட்டனர். எனவே, காங்கிரஸ் ஆதரவு இல்லையெனில் திமுக அரசு கவிழ்ந்துவிடும் என்ற இக்கட்டான நிலை.

அந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வென்றுவிட்டால், ராமதாஸ், காங்கிரசை அதிமுக பக்கம் கொண்டுசென்று விடுவார் என்ற செய்திகள் வேகமாகப் பரவின. எனவே, திமுக முகாமில் உச்சகட்ட டென்ஷன். நம் ஆதரவில் மகனை ராஜ்யசபா உறுப்பினராக்கி, அமைச்சராகவும் ஆக்கிவிட்டு, தற்போது நம் அரசையே காவுவாங்கப் பார்க்கிறாரா ராமதாஸ்? என்ற கோபம் வெடிக்கிறது திமுக முகாமில்.

இந்த விஷயத்தில் ஸ்டாலின் மிகவும் அப்செட் என்ற தகவல்களும் கசிகின்றன. எனவே, அதிமுக வெல்கிறதோ? இல்லையோ? பாமக போட்டியிடக்கூடிய சிதம்பரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், தருமபுரி, திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளிலும் அக்கட்சியை எப்படியும் வீழ்த்தியே ஆக வேண்டுமென தீர்மானிக்கிறது திமுக.

பாமக எதிர்முகாமிற்கு சென்றதால், தம் அணியில் விடுதலை சிறுத்தைகளை வைத்துக்கொண்டது திமுக. சிதம்பரத்தில் பாமகவை எதிர்த்து திருமாவளவனை அவர் கேட்டபடியே தனிச்சின்னத்தில் களமிறக்கியது திமுக.

காங்கிரஸ் கோட்டையான புதுச்சேரியில் போட்டியிட்ட பாமகவை எதிர்த்து காங்கிரசின் நாராயணசாமி நின்றார். இவைதவிர, தமிழகத்தில் உள்ள இதர தொகுதிகளான திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி ஆகிய ஐந்திலும் பாமகவோடு மோதியது திமுக.

சொல்லிவைத்தாற்போல், அனைத்திலும் பாமகவை வீழ்த்தியது திமுக. அத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக(ஈரோடு), சிபிஎம்(கோவை) மற்றும் சிபிஐ(தென்காசி) போன்ற கட்சிகள் தலா 1 இடத்திலேனும் வெற்றிபெற, லேட்டஸ்டாக கூட்டணிக்குள் வந்து மொத்தமாக 7 தொகுதிகளை வாங்கிக்கொண்டு சென்ற பாமகவின் நிலைமை பரிதாபமானது.

திமுக கூட்டணி மொத்தம் 28 இடங்களில் வென்றதன் மூலமாக, திமுக ஆட்சியும் தப்பியது. பாமகவின் செல்வாக்கும் நொறுக்கப்பட்டது.

பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலில், வேறுவழியின்றி திமுக – பாமக கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலும், அக்கூட்டணி தேறவில்லை. இதற்கிடையில், 2014 நாடாளுமன்ற தேர்தலில், மூன்றாவது அணியில் இணைந்து போட்டியிட்ட பாமக, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் நிலவிய சாதியப் பூசல்களைப் பயன்படுத்தி, அன்புமணியை மட்டும் தனிப்பட்ட அக்கறை எடுத்து வெற்றிபெற வைத்தது.

அதன்பிறகு, 2016 சட்டமன்ற தேர்தலில்தான் பிரச்சினை பெரிதானது. மருத்துவப் பட்டப்படிப்பு முடித்துள்ள அன்புமணியை, தமிழகத்தின் தகுதிவாய்ந்த முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற கோஷத்துடன் சட்டமன்ற தேர்தலை தனியாக சந்தித்தது பாமக.

அப்போது முதலமைச்சர் போட்டியிலேயே இல்லாத ஸ்டாலினை தேவையின்றி வம்புக்கும் இழுத்தது பாமக. அதை ஸ்டாலின் எப்போதும் மறக்கவேயில்லை என்றே சொல்கிறார்கள் அரசியல் வட்டாரங்களில்.

ஆனால், ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், தன்னை தகுதியான முதல்வர் வேட்பாளர் என்று முன்னிறுத்தி, சாதி வாக்குகளை நம்பி பெண்ணாகரத்தில் போட்டியிட்ட அன்புமணி, அத்தொகுதியில் ஸ்டாலினின் வேட்பாளரான இன்பசேகரனிடமே தோற்கிறார். அந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டியிட்ட பாமக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 0.

அப்போதிருந்தே திமுக மற்றும் பாமக இடையிலான பனிப்போர் உச்சத்தில் இருந்துகொண்டே இருந்தது எனலாம். தற்போது நடந்துமுடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாமகவை தனது கூட்டணியில் இழுக்க திமுக முயன்றதாகவும், ஆனால் அதையும் மீறி அதிமுக அணியில் பாமக இணைந்ததால், திமுக தலைவர் ஸ்டாலின் உச்சகட்ட கோபத்தில் ராமதாசை வார்த்தைகளால் விளாசினார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் திமுக நினைத்திருந்தால் பாமகவை தனது கூட்டணியில் இணைத்திருக்கலாம். ஆனால், திமுக விரும்பவில்லை என்பதே உண்மை. ஏனெனில், பாமக இல்லாமலேயே 2009 நாடாளுமன்ற மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் வடமாவட்டங்களில் நல்ல வெற்றியை பெற்றது திமுக கூட்டணி.

மேலும், அதிமுக அரசையும், மோடி அரசையும் கடைசிவரையில் மிக மோசமாக விமர்சித்துவிட்டு, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே வைக்க மாட்டோம் என சொல்லிக்கொண்டு, மீண்டும் கூட்டணியில் இணைந்துகொண்ட பாமகவை, வாக்களர்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே ஸ்டாலின் அவ்வாறு வசைபாடினார்.

தேய்ந்து கொண்டிருக்கும் பாமகவை தேவையில்லாமல் கூட்டணியில் சேர்த்து, 2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியாக மாறக்கூடிய வாய்ப்புள்ள அக்கட்சியை, சில இடங்களில் வெற்றிபெற வைக்க ஸ்டாலின் விரும்பவில்லை என்பதே உண்மை.

திமுகவின் பாரம்பரிய வன்னியர் வாக்கு வங்கியில் ஓட்டைப்போட்டு உருவானதுதான் பாமக என்பதை பலரும் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். திமுக போட்டியிடாத 1952 தேர்தலில், வாக்குறுதிகளின் அடிப்படையில், வன்னியர் சமூக தலைவர்களான மாணிக்கவேல் நாயக்கர் மற்றும் ராமசாமி படையாட்சி ஆகியோரின் கட்சிகளுக்கு ஆதரவளித்து, அக்கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றன.

பின்னர், மற்றொரு வன்னியர் தலைவரான ஏ.கோவிந்தசாமியின் மூலமாக தனக்கான உதய சூரியன் சின்னத்தையும் திமுக பெற்றது. எனவே, தொடக்கம் முதலே திமுகவிற்கும் வன்னியர் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க பிணைப்பு உண்டு.

திமுக தனது தொடக்க காலங்களில், டெல்டா மற்றும் வடமாவட்டங்களின் துணையுடன்தான் வளர்ந்து வந்தது. 1962 சட்டமன்ற தேர்தலில், காமராஜரின் அரசியல் வியூகத்தையும் மீறி 50 சட்டமன்ற இடங்களில் திமுக வெல்வதற்கு, வடமாவட்டங்களின் உதவியே பெரிய காரணம்.

ஆனால், கடந்த 1989ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி தானாக முன்வந்து அளித்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையும் மீறி, பாமக ஒரு செல்வாக்கான கட்சியாக வடமாவட்டங்களில் வளர்ந்து, திமுகவின் பாரம்பரிய வன்னியர் வாக்குகளில் பெரிய ஓட்டையைப் போட்டது.

எனவே, பாமகவை ஸ்டாலின் தனியாக குறிவைப்பதென்பது, திமுகவின் பாரம்பரிய வன்னியர் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சேதாரத்தை சரிசெய்வதாகவும் இருக்கலாம். பாமகவின் சிறிய எழுச்சியைக்கூட திமுகவிற்கு தீங்கான ஒன்றாக ஸ்டாலின் கருதலாம்.

அந்த அடிப்படையில்தான், இந்த மக்களவைத் தேர்தலில் பாமகவை குறிவைத்து, அக்கட்சி போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிட்டது திமுக. குறிப்பாக, சாதிய வாக்குகளை நம்பி நின்ற அன்புமணியை வீழ்த்த, தனி வியூகத்துடனேயே களமிறங்கியது திமுக.

தேவையான அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனையும் பயன்படுத்திக் கொண்டது. சமீபத்தில் மறைந்த காடுவெட்டி குருவின் உறவினர் மற்றும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி போன்றோர் வேல்முருகனின் கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்தது திமுகவுக்கு நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது.

அன்புமணியை 70000+ வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வீழ்த்தியது நிச்சயம் ஒரு பெரிய வெற்றிதான். சிதம்பம் தொகுதியில் திருமாவளவன் தட்டுதடுமாறி வெறும் 3000+ வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க, தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வென்றது கவனிக்கத்தக்கது. கடந்த 2014 தேர்தலில் அன்புமணி வென்றதும் கிட்டத்தட்ட இதே வாக்குகள் வித்தியாசத்தில்தான்.

கடந்த 2009 தேர்தலில் சறுக்கத் தொடங்கிய ராமதாஸ், அடுத்த பத்தாண்டுகளில் நடைபெற்ற 4 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக சறுக்குகிறார்.

எப்படியேனும் 5% வாக்குகளை தக்கவைத்துக் கொண்டிருக்கும் பாமகவை, அரசியல்ரீதியாக திட்டமிட்டு காலிசெய்வதன் மூலமாக, அந்த வாக்குகளை திமுகவின் பக்கமாக மடைமாற்ற ஸ்டாலின் முயல்கிறார் என்றே கருதலாம்.

– மதுரை மாயாண்டி