சென்னை:

ஊழலுக்கு ஒத்துழைக்காத கல்வி துறை செயலாளர் உதயச்சந்திரனை மாற்ற முயற்சிப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான காரணம் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு உதயச்சந்திரன் ஒத்துழைக்கவில்லை என்பது தான்.

உதயச்சந்திரன் வளைந்து கொடுக்க மறுப்பதால் கட்சிக்காரர்களுக்கு எந்த நன்மையும் செய்யமுடியவில்லை என்று பினாமி முதல்வரிடம் செங்கோட்டையன் முறையிட்டதாகவும், அதையேற்று உதயச்சந்திரனை இடமாற்றம் செய்ய தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், ‘‘அதேபோல் உயர்கல்வித் துறை செயலாளருக்கும் இடமாற்ற ஆணை தயாராகி வருகிறது. உயர்கல்வித் துறை செயலாளராக உள்ள சுனில் பாலிவால் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் ஊழல்கள் நடப்பதால் அதைத் தடுக்கும் வகையில் அவை குறித்த துணைவேந்தர்களின் அதிகாரத்தை பறிக்க பாலிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதனால் சிலர் அச்சத்தில் பாலிவாலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியதாகவும், அதை பினாமி ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தரமான கல்வி வழங்கும். முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இரு அதிகாரிகளை மாற்றத்துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.